Published : 17 Feb 2020 03:20 PM
Last Updated : 17 Feb 2020 03:20 PM
வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியாகத் தேர்வுகள் நடக்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
ஜிப்மரில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. அதில் புதுச்சேரிக்கு 150 இடங்களும், காரைக்காலுக்கு 50 இடங்களும் இருக்கின்றன. ஜிப்மருக்குத் தனியாக நுழைவுத் தேர்வை நடத்துவது அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்துவதாகவும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் கருதி வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மருக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இச்சூழலில் ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில், ''வரும் கல்வியாண்டில் ஜிப்மர் தனியாக தேர்வெதையும் நடத்தாது. நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும். மத்திய சுகாதாரத்துறை மூலம் கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தகவல் பெற www.nta.ac.in, ntaneet.nic.in ஆகிய இணைய முகவரிகளை நாடலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் புதுச்சேரி மாணவர்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 200 மருத்துவ இடங்களுக்கு பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்சி என இட ஒதுக்கீடு தருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது. அதனால் வரும் கல்வியாண்டில் 10 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும். 10 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் கூடுதல் இடங்கள் பெற்றுக் கலந்தாய்வு நடத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜிப்மர் நிர்வாகம் கூடுதல் இடங்கள் பெற்றுக் கலந்தாய்வு நடத்துவார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடக்க இருப்பதால் கலந்தாய்வை ஜிப்மர் நிர்வாகம் நடத்துமா, புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நடத்துமா, அல்லது மத்திய அரசின் தேசிய மருத்துவக் கழகம் நடத்துமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்" என்று கோருகின்றனர்.
ஜிப்மர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "தேர்வு முறையை மட்டுமே மாற்றித் தகவல் வந்துள்ளது. அதன்படி தகவல் வெளியிட்டுள்ளோம். அடுத்தகட்டமாக பிற விவரங்கள் வெளியாகும்" என்று குறிப்பிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT