Last Updated : 16 Feb, 2020 08:26 AM

 

Published : 16 Feb 2020 08:26 AM
Last Updated : 16 Feb 2020 08:26 AM

30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை: பொறியியல் கல்லூரிகளில் 50% இடம் குறைப்பு; புதிய பாடப்பிரிவுகளுக்கும் ஏஐசிடிஇ கட்டுப்பாடு

சென்னை

நாடு முழுவதும் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டில் 50 சதவீத இடங்களை குறைக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிகள் அடங்கிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை (2020-21) அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சம் வருமாறு: கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 30 சதவீதத்துக்கும் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட கல்லூரிகள் வரும் கல்விஆண்டில் 50 சதவீதம் இடங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், ஏற்கெனவே உள்ள மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பாடங்களுக்கான சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் இந்த பாடங்கள் சார்ந்த புதிய படிப்புகளை தொடங்கவும் அனுமதி தரப்படாது.

அதேநேரம் தற்போதைய காலத்துக்கேற்ப செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், 3டி பிரின்டிங் போன்ற புதிய பாடங்களைதொடங்க கல்லூரிகளுக்கு அனுமதி தரப்படும்.

இதுதவிர குறைந்தபட்சம் கல்லூரியில் உள்ள 60 சதவீதபாடப்பிரிவுகளுக்கு 3 ஆண்டுகள் ஏஐசிடிஇ அனுமதி பெற்றிருக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் 1:15 விகிதமும் அரசுக் கல்லூரிகளில் 1:20 விகிதமும் ஆசிரியர்கள்-மாணவர் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

இதேபோல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை சமர்பிக்க நிர்பந்திக்கக் கூடாது. அவர்களுக்கான ஊதியத்தை தேசிய வங்கிகள் மூலமாகத்தான் வழங்க வேண்டும். இதன்படி, ஓராண்டு ஊதிய விவரங்கள் சரிபார்க்கப்படும். மீறினால் அங்கீகாரம் ரத்து உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேநேரம் கல்லூரி நிர்வாகம் வழங்கிய பணிகளை முழுமையாக முடிக்காமல் ஆசிரியர்கள் பாதியில் வெளியேறக்கூடாது.

வரும் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் பெறவும் நீட்டிக்கவும் விரும்பும் கல்லூரிகள் பிப். 29-க்குள் விண்ணப்பிக்கலாம். அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மார்ச் 5-ம் தேதிக்குள் முழுமையாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுபோன்ற முக்கிய அம்சங்கள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர்-மாணவர் வீத மாற்றத்தால் கணிசமான பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். எனினும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு தனி விதிகள் வகுக்கப்பட வேண்டும். மேலும், அங்கீகாரம் பெறுதலுக்கான கையேடு தாமதமாக வெளியிடப்பட்டதால் பொறியியல் கலந்தாய்வு பணிகளில் தாமதம் ஏற்படக்கூடும் என பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x