Published : 11 Jan 2020 08:11 AM
Last Updated : 11 Jan 2020 08:11 AM

அறிவியல் நூல்களை படிக்க குழந்தைகளை தூண்ட வேண்டும்: பெற்றோர்களுக்கு விஞ்ஞானி ஆ.சிவதாணுப்பிள்ளை அறிவுரை

பபாசி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியின் 2-ம் நாள் நிகழ்வில், விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு ஆகியோர் எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ என்ற நூலை வெளியிடுகிறார் பிரம்மோஸ் விஞ்ஞானி ஆ.சிவாதாணுப்பிள்ளை. உடன் இந்து தமிழ் திசை ஆசிரியர் கே.அசோகன், இந்து ஆர்.நடராஜன், பபாசி பொருளாளர் ஆ.கோமதிநாயகம், செயற்குழு உறுப்பினர் ஞா.முத்துசாமி, பேராசிரியர் யாழினி முனுசாமி. படம்: பு.க.பிரவீன்

சென்னை

அறிவியல் சார்ந்த நூல்களை படிக்க குழந்தைகளை பெற்றோர்கள் தூண்ட வேண்டும் என்று விஞ்ஞானி ஆ.சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.

பபாசி சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு ஆகியோர் எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ என்ற நூலை, பிரம்மோஸ் விஞ்ஞானி ஆ.சிவாதாணுப்பிள்ளை வெளியிட, இந்து ஆர்.நடராஜன் பெற்றுக்கொண்டார். விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்: விஞ்ஞானி ஆகும் வழிகள்’ என்ற நூலை விஞ்ஞானி ஆ.சிவதாணுப்பிள்ளை அறிமுகப்படுத்த, அதைமயில்சாமி அண்ணாதுரை பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை' வெளியீடான ‘இயர்புக்-2020’ நூலையும் சிவதாணுப்பிள்ளை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

தமிழில் அறிவியல் நூல்களை எழுதி வரும் இருவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் மூலம் நிறைய
புத்தகங்கள் வெளிவர வேண்டும்.

தொழில்நுட்பங்கள் சார்ந்த நூல்கள் வர வர, தமிழ் வளரும். இனிவரும் காலங்களில் தமிழ் வளரவேண்டும் என்றால் தொழில்நுட்பத்
தில் தமிழ் இடம்பெற வேண்டும். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை 'இந்து தமிழ்' நாளிதழ் ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்தநூல்களை இளைஞர்கள் படிக்கும்போது இளைஞர்களின் மனதில், அறிவியல் தொழில்நுட்பம் மீதானஆர்வம் அதிகரிக்கும். எனவேபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அறிவியல் சார்ந்த நூல்களை
படிக்கத் தூண்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசும்போது, ‘‘வருங்காலத்தில் தமிழ் பேராசிரியர்களால் தமிழை வளர்க்க முடியாது. தமிழ் சாராத துறைகளைச் சேர்ந்த தமிழர்களால் மட்டுமே வளர்க்க முடியும். தமிழ் ரத்தம் ஓடும் விஞ்ஞானிகள்தான் உலக அளவில் இந்தியாவை தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் தமிழ் இலக்கியவாதிகளுக்கு புதிய பேசு பொருள்களையும், பாடு பொருள்களையும் வழங்கியுள்ளனர். ஒரு மொழிஅழகியலையும், வாழ்வியலையும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. புதிய தரவுகள் வந்தால்தான் மொழி செழுமை அடையும். துறை சார்ந்த தமிழ் வளர வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் 'இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன், பபாசி பொருளாளர் ஆ.கோமதிநாயகம், செயற்குழு உறுப்பினர் ஞா.முத்துசாமி, பேராசிரியர் யாழினி முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயர்புக்-2020

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, ‘‘தமிழில் படித்து எண்ண செய்யலாம் என்பதை 'விண்ணும் மண்ணும்' நூலை படிக்கும்போது அறியலாம். விண்ணுக்கும் மண்ணுக்கும் நீங்கள் போகலாம் என்ற ஆர்வத்தை பெறலாம். ‘அடுத்த கலாம்: விஞ்ஞானி ஆகும் வழிகள்’ என்ற நூல் மூலம் எது மாதிரியான இடங்களுக்கு போகலாம் என்பதை அறியலாம். அது ஒரு திசை காட்டியாகவும் இருக்கும். அப்படிச் சென்றால், நீ எங்கே இருப்பாய் என்பதற்கு ‘இந்து தமிழ் திசை' வெளியிட்டுள்ள இயர்புக்-2020 புத்தகம்தான் சாட்சி. இந்த இயர்புக்கில் சாதனைகளையும், சாதனையாளர்களையும் கொண்டு வந்துள்ளனர். முதல் இரு நூல்களை படித்து உயர்ந்தால், 10 ஆண்டுகள் கழித்து வெளியாகும் இயர்புக்கில் இடம்பெறுவீர்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x