Published : 10 Oct 2019 11:03 AM
Last Updated : 10 Oct 2019 11:03 AM
சென்னை
சீன அதிபரின் தமிழக வருகையை ஒட்டி, மாண்டரின் மொழியில் அவரின் பெயரை எழுதி எவர்வின் பள்ளி மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 2 நாள் பயணமாக நாளை சென்னை வருகின்றனர். இருநாட்டு நல்லுறவு, சர்வ தேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் பேச்சு நடத்துகின்றனர். தலைவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இரு நாட்டுத் தலைவர்களின் வருகையை ஒட்டி, மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள கலைச்சின்னங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொளத்தூரில் உள்ள எவர்வின் தனியார் பள்ளி மாணவர்கள் 2 ஆயிரம் பேர், சீன அதிபரை தனித்துவமான முறையில் வரவேற்றுள்ளனர். சீனாவின் மாண்டரின் மொழியில் ஜி ஜின்பிங் என்ற பெயர் வருமாறு அப்பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஜின் பிங்கின் முகமூடி வழங்கப்பட்டிருந்தது.
'இதயபூர்வமாக வரவேற்கிறோம்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த (HEARTY WELCOME) வார்த்தைகள் சுமார் 1.5 டன் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஜி ஜின் பிங் என்ற பெயரைச் சுற்றி வேறு மாணவர்களும் நிற்க வைக்கப்பட்டனர். அவர்களின் கைகளில் இந்திய, சீன தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. அவற்றுக்கு முன்னால் ஜி ஜின்பிங்கின் உருவப் படம் வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வைச் சுற்றிலும் நடுநடுவே இந்தியா மற்றும் சீன நாடுகளின் தேசியக் கொடிகள் கம்பீரமாகப் பறந்தன.
வீடியோ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT