Last Updated : 15 Apr, 2025 06:19 AM

1  

Published : 15 Apr 2025 06:19 AM
Last Updated : 15 Apr 2025 06:19 AM

தேர்தல் அதிகாரியை returning officer என்றழைப்பது ஏன்? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 127

Are you stalking me? என்று ஒரு பெண் கேட்டால் ‘நீ என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறாயா’ என்கிற அர்த்தமா? - Stalking என்பது (பெண்ணோ, ஆணோ) பலகாலம் ஒருவரைப் பின்தொடர்வது. அதுவும் சம்பந்தப் பட்டவருக்கு அச்சம் அல்லது வெறுப்பு ஏற்படும் வகையில் பின்தொடர்வது. இதை ‘ஸ்டாக்கிங்’ என உச்சரிக்க வேண்டும்.

நேற்று உங்கள் வீட்டுக்கு வந்து இருப்பேன் என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது? - “I might have come to your house yesterday.”

Happy returns of the day, Income tax returns விளக்கங்களைத் தொடர்ந்து வேறொரு வாசகருக்கு இன்னொரு சந்தேகம் எழுந்திருக்கிறது. தேர்தல் அதிகாரியை returning officer என்றழைப்பது ஏன்? - ஒரு Returning Officer தேர்தலை மேற்பார்வையிடுவார். தேர்தல் முடிவுகளை அறிவித்து அதிகார பூர்வமாக உறுதி செய்வார். He ‘returns the result’. அதாவது தேர்தல் முடிவை மக்களுக்கு ‘திருப்பி அளிக்கிறார்’. அவர்களது ஒட்டுமொத்த முடிவு என்ன என்பதை வாக்களித்த அவர்களுக்கு அறிவிக்கிறார்.

Thesaurus என்பதில் ஒரு வார்த்தையின் சம வார்த்தைகள் என்ன என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படியானால் அந்த வார்த்தைக்குப் பதிலாக அதற்கு சமமாக உள்ள எந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம் அல்லவா? - மேலோட்டமாக அப்படிச் சொல்ல லாம்தான். ஆனால், பயன்பாட்டில் நுட்பமான வேறுபாடு இருக்கலாம். Happy என்பதன் ஒரு synonym delighted. என்றாலும் delighted என்பது ஒரு த்ரில் கலந்த மகிழ்ச்சியை உணர்த்துகிறது. Anger, Furious ஆகியவை synonyms. ஆனால் furious என்பது அதிகப்படி கோபத்தை உணர்த்துகிறது.

Normal என்ற சொல்லின் சம வார்த்தையாக average என்பதும் அளிக்கப்பட்டிருக்கும். ஓர் அறையில் 10 நோயாளிகள் இருந்தால் அவர்களின் average வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்பதைத் தாண்டியும் இருக்கலாம். ஆனால், normal temperature என்பது 98.6 தானே.

நான் ஒன்றும் அதற்காக ஏங்கவில்லை என்பதை ஆங்கிலத்தில் எப்படி கூறலாம்? - I am not yearning for it. Yearn என்பது அடைய முடியாத அல்லது அடைவதற்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றுக்காக தீவிரமாக ஆசைப்படுவது அல்லது ஏக்கப்படுவது. Artistes yearn for recognition of their talents.

Hippocrates என்பவரை நவீன மருத்துவ உலகின் தந்தை என்கிறார்கள். Hypocrite என்பதற்கும் இந்தப் பெயருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? - இரண்டின் அடிப்படையும் வேறு வேறு. Hypokrites என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை hypocrite. கிரேக்க மொழியில் இதன் பொருள் ஒரு நடிகர். காலப்போக்கில் வெளிவேடம் போடுபவர்களை (உள்ளே ஒருமாதிரியும் வெளியே வேறு மாதிரியும் நடந்து கொள் பவர்களை) hypocrite என்று கூறத் தொடங்கி விட்டோம்.

Hippocrates என்கிற வார்த்தை hippos, kratos ஆகிய இரு கிரேக்கச் சொற்களின் இணைப்பு. Hippos என்றால் குதிரை. Kratos என்றால் சக்தி.
நீர்யானையைக் குறிக்கும் hippopotamus என்பது hippos (குதிரை), ​potamos (ஆறு) ஆகியவற்றின் இணைப்பு. நதிக்குதிரை.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x