Published : 19 Nov 2024 06:31 AM
Last Updated : 19 Nov 2024 06:31 AM
ஒரு வேலையைச் செய்து முடித்தவுடன் I am done எனலாம். வாரக் கணக்கில் ஓவர்டைம் செய்து அந்தப் பணிகளை முடித்த ஒருவர் ‘I am done. I am going on vacation’ என்று கூறலாம்.
சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிட்டது என்பதைக் குறிக்கவும் I am done என்பர். குறிப்பாக எதையாவது அதிகப்படியாகப் பரிமாற வந்தால் I am done என்றால் ‘நான் சாப்பிட்டு முடித்து விட்டேன். இனியும் எதையும் சாப்பிட இடமில்லை’ என்று பொருள்.
அதற்காக ஒருவர் சோகம் பொங்க உங்களிடம் வந்து ‘I am done’ என்று கூறும்போது, அவர் வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டார் என்பதைத்தான் கூறுகிறார் என்று எண்ணிக்கொண்டு ‘மிகவும் மகிழ்ச்சி’ என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சக் கூடாது.
ஏனென்றால் வாழ்க்கையில் விரக்தி அடையும்போது, ‘போதும் நான் பட்ட துன்பங்கள். இனியும் தாங்க முடியாது’ என்பதை உணர்த்தும் வகையிலும் ஒருவர் I am done எனலாம்.
The record went platinum என்று படித்தேன். இதற்குப் பொருள் என்ன? - இசை உலகைப் பொறுத்தவரை ஒரு தனி இசை அல்லது ஒரு இசைத்தொகுப்பின் விற்பனை ஒரு மில்லியன் ( அதாவது பத்து லட்சம்) என்பதைத் தாண்டி விட்டால் அதை The record went platinum என்பார்கள். இது அந்த இசைத்தொகுப்பு பெரும் வெற்றி பெற்றதைக் குறிக்கிறது. அமெரிக்காவில் உள்ள ரெகார்ட் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் என்ற அமைப்பு ஒரு பாடல் அல்லது ஒரு ஆல்பம் ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனையானால் அதற்குத் தொடக்கத்தில் தங்கச் சான்றிதழ் அளித்தது.
பின்னர் ஐந்து லட்சம் பிரதிகள் விற்றால்தான் தங்கச் சான்றிதழ் என்று மாற்றிக்கொண்டது. 1976-ல் பிளாட்டினம் (இது தங்கத்தை விட அதிக மதிப்பு வாய்ந்தது) சான்றிதழை அறிமுகப்படுத்தியது. இதைப் பெற விற்பனை பத்து லட்சம் பிரதிகளைத் தாண்டி இருக்கவேண்டும்.
Flourist என்று மாவு அரைக்கும் இயந்திரம் வைத்துள்ள கடைக்காரரை குறிப்பிடலாமா? - Floor என்றால் தளம். Flour என்றால் மாவு. ஆனால், florist என்பது flower என்பதை அடிப்படையாகக் கொண்ட சொல். Florist என்பது பூக்கடைக்காரரைக் குறிக்கும். Flourist என்ற சொல் (இதுவரை) கிடையாது!
Crow என்றால் காகம் என்பது புரிகிறது. Crew என்றால் என்ன? - இணைந்து பணி செய்யும் ஊழியர்களை அப்படிக் குறிப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக விமானம் அல்லது கப்பலில் பணிபுரியும் ஊழியர்களை crew என்று குறிப்பிடுகிறார்கள்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT