Published : 12 Nov 2019 08:40 AM
Last Updated : 12 Nov 2019 08:40 AM
‘செல்போனை சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு, குழந்தைகளுடன் மனம்விட்டு பேசுங்கள் என்று பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுவும் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி.
பேசுவதற்கு செல்போன் ஒரு தடையா? குழந்தைகளும் யோசித்து பார்க்க வேண்டும். செல்போன் வருவதற்கு முன்னரும் இந்தப் பிரச்சினை இருந்தது உண்மை. ‘அப்பா வேலைக்கு போய்விட்டு இரவு வருவார். அதற்குள் நாங்கள் தூங்கி விடுவோம்’ என்று எத்தனையோ குழந்தைகள் கூறியிருக்கின்றனர். ‘அம்மா வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பார். எங்களை எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார்’ என்று கூறியிருக்கின்றனர்.
அதேபோல் பெற்றோர்கள் கூறும் புகார்களும் இருக்கின்றன. ‘நான் எது சொன்னாலும் எதிர்த்து பேசுகிறான் / பேசுகிறாள். அல்லது என்னுடன் பேசுவதில்லை’ என்கின்றனர். வீட்டுக்கு வீடு ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கிறது. குழந்தைகளுடன் பெற்றோர் பேசுவதற்கோ அல்லது பெற்றோருடன் குழந்தைகள் பேசுவதற்கோ தடை செல்போன் இல்லை. ஆனால், அதுவும் இப்போது ஒரு காரணம். அதைத்தான் பள்ளிக் கல்வி இயக்குநர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
பள்ளிக் கல்வி இயக்குநர் கூறியபடி குழந்தைகள் தினத்தன்று இரவு 7:30 முதல் 8:30 மணி வரை, பெற்றோர் தங்களது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு, ஒரு மணி நேரம் குழந்தைகளுடன் பேசிப் பாருங்கள். உங்களுக்கு அவர்கள் மீது அன்பு, அக்கறை உள்ளது என்பதை வெளிப்படுத்துங்கள். பள்ளி மாணவ, மாணவிகளே... நீங்களும் உங்கள் பெற்றோரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அந்த ஒரு மணி நேரம் போதும். உங்கள் பெற்றோர் மறந்தாலும், 14-ம் தேதி நினைவுபடுத்துங்கள். அவர்களுடன் பேசுவதற்கு நீங்களும் தயாராக இருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT