Published : 17 Oct 2019 08:34 AM
Last Updated : 17 Oct 2019 08:34 AM
அன்பான மாணவர்களே...
உலக உணவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதற்கு மறுநாளே இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. வறுமை என்பது உணவு கூட கிடைக்காமல் பட்டினியில் வாடுவது என்றுதான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படியல்ல என்று கூறுகின்றனர்.
உணவு மட்டுமல்ல, உடை, தங்குவதற்கு குடிசை, சமுதாயத்தில் நல்ல மரியாதை போன்ற பல விஷயங்கள் இல்லாமல் இருந்தாலே வறுமைதான் என்று வரையறுக்கின்றனர். இன்று உலக வறுமை ஒழிப்பு தினம். வறுமையை ஒழிக்க சம்பந்தப்பட்ட அரசு மட்டும்தான் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா? அப்படி நினைத்தால், நம் ஒவ்வொருவருக்கும் சமூகத்தின் மீதுஅக்கறை இல்லையா?
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும். வறுமையில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தாலே போதும். அவர்களுக்கு உதவியாக இருக்கும். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று சொல்வார்கள். பட்டினியில் இருப்பவருக்கு உணவு கொடுத்தால், அவருக்கு உயிர் கொடுத்தது போல் என்கின்றனர். அந்தளவுக்கு பட்டினி என்பது மிகவும் கொடுமையானது.
உணவுதான் என்றில்லை... எது இல்லாமல் ஏழைகள் கஷ்டப்படுகிறார்களோ, அதை முடிந்தால் தரலாம். இந்தப் பழக்கம் சங்கிலி போல தொடர்ந்தால், வறுமையை ஓரளவுக்கு குறைக்கலாம். உதவி செய்து, அது கிடைக்கப் பெற்றவர்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. செய்து பாருங்கள் மாணவர்களே...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT