Published : 16 Oct 2019 10:20 AM
Last Updated : 16 Oct 2019 10:20 AM
அன்பான மாணவர்களே...
உலக உணவு தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட தினம். உலகில் கோடிக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து கிடைக்காமலும், பட்டினியாலும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க உணவு பற்றிய விழிப்புணர்வையும், சேவையும் ஊக்கப்படுத்தவே உலக உணவு தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
எத்தனையோ பேர் உணவு கிடைக்காமல் பட்டினியால் இறக்கின்றனர். எனவே, உணவை வீணாக்காதீர்கள். நல்ல உணவாக தேர்ந்தெடுங்கள். ‘ஜங்க் புட்’ என்ற வகைகளை முடிந்த அளவுக்கு தவிர்த்து விடுங்கள். அதனால்தான் நமது முன்னோர்கள் ‘உணவே மருந்து’ என்று கூறியிருக்கிறார்கள். நாம் உண்ணும் உணவு, நமது உடல்நலம், மனநலத்துடன் தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகில் எதைக் கொடுத்தாலும், ‘இது போதாது... இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்கலாம்’ என்று மனம் சிந்திக்கும். ஆனால், உணவு மட்டும்தான் ‘போதும்’ என்று சொல்ல வைக்கும். அந்த உணவை வீணாக்க கூடாது. உணவுப் பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்து முடிப்பதற்குள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும்.
எனவே, மீதமாகும் உணவை மற்றவர்களுக்கு வழங்கலாம். வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப வாங்கலாம். வீடுகளில் இடம் இருந்தால் காய்கறிகளை சிறிதளவாவது நீங்களே உற்பத்தி செய்ய முயற்சித்து பாருங்கள். ஆரோக்கியம் மட்டுமல்ல... உங்களையும் மகிழ்ச்சிப்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT