Published : 30 Nov 2023 04:10 AM
Last Updated : 30 Nov 2023 04:10 AM

விதி மீறல் குற்றமே

விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் நிற்கக் கூடாது என்று கூறிய பேருந்து நடத்துனரை தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி செல்வதும் அதனையொட்டி வேறு சிக்கல்கள் மூள்வதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதில் பெண் பிரமுகர் தட்டி கேட்கிறேன் என்கிற பெயரில் மாணவர்களை தாக்கிய போது அதனை கண்டித்தோம். அதையடுத்துஇன்னொரு மாணவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து அவரது பாதங்கள் சிதைந்தபோது வருந்தினோம்.

அதேபோன்று பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதன் மூலம் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினோம். ஆனால், இம்முறை பொறுப்பற்றத் தனத்தையும் தாண்டி தனது தவறை தட்டிக் கேட்டதற்காக மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர். இது கடுமையான கண்டனத்துக்குரியது.

பேருந்தில் தொங்கிச் செல்வது, ‘ரூட்டு தலை’யாக மாறி சக பயணிகளை சீண்டுவது, பேருந்துக்கு மேலேறுவது போன்ற முறைகேடான காரியங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது.

இருப்பினும் பெரும்பாலான சமயங்களில் அரசாங்கம் இத்தகைய அசம்பாவிதம் நேரும்போது பேருந்து ஓட்டுநர்களையும், நடத்துநர்களையுமே கேள்விக்குள்ளாக்குகிறது. இனியேனும் இத்தகைய ஒழுங்கீனமான மாணவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

முக்கியமாக இத்தகைய சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க பிரத்தியேக ஹெல்ப்லைன் எண்கள் மாவட்டம்தோறும் உருவாக்கப்பட்டு புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x