Published : 11 Sep 2020 01:36 PM
Last Updated : 11 Sep 2020 01:36 PM
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், டிப்ளமோ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி குமுளூர், புதுக்கோட்டை வம்பன் ஆகிய இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் வேளாண்மை டிப்ளமோ படிப்பும், கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியில் தோட்டக்கலை டிப்ளமோ படிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை, வேலூர், பொள்ளாச்சி, ராணிப்பேட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, கோவில்பட்டி, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் வேளாண்மை படிப்பும், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் தோட்டக்கலை படிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் 860 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை 2020-2021 ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவை துணைவேந்தர் என்.குமார் தொடங்கி வைத்தார்.
இது குறித்து வேளாண்மை டீன் மற்றும் மாணவர் சேர்க்கைத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் கூறியதாவது:
''வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் சேர மாணவர்கள் https://tnauonline.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பின்னர் அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வரைவோலையாக எடுத்து விண்ணப்பக் கட்டணம், உரிய சான்றிதழ்களை இணைத்து, 'வேளாண்மை முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கைத் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை- 641003' என்ற முகவரிக்கு வரும் செப். 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். 29-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு 0422-6611322, 0422-6611328 ஆகிய எண்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT