Last Updated : 21 Feb, 2023 06:22 AM

 

Published : 21 Feb 2023 06:22 AM
Last Updated : 21 Feb 2023 06:22 AM

உலக தாய்மொழி நாள் | எமோஜி: உலகப் பொது மொழி

நியூயார்க் ஓவிய அரங்கில் எமோஜி சித்திரங்கள்

உள்ளத்தில் உள்ளதைச் சொல்வதற்குத்தான் மொழி. இதற்குத்தான் நாட்டுக்கு நாடு எத்தனை மொழிகள், வட்டார வழக்குகள்? ஆனால், உணர்வுகளைப் பரிமாற முகபாவம் போதாதா? முகபாவத்திலிருந்து ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறது நம் புதுக்காலம். அதுதான் எமோஜி. ஸ்மார்ட் போன், சமூக ஊடகங்கள் ஆகியவற்றுக்கான புது மொழி இது.

எமோஜி, இன்று உலகப் பன்முக மொழியாகிவிட்டது. உலக அளவில் நாள் ஒன்றுக்குச் சுமார் 600 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என எமோஜிபீடியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து எமோஜி மொழிப் பயன்பாட்டை அறிந்துகொள்ள முடியும். எல்லைகளைக் கடந்து ஒரு புதிய உலகத்தை திறன்பேசி உருவாக்கிவிட்டது. அதன் தேசிய மொழி எமோஜி.

இந்த மொழியை முதன்முதலாக ஜப்பானைச் சேர்ந்த ஷிகேடகா குரிதா 1999இல் வடிவமைத்தார். டொகோமோ நிறுவனத்தின் தொடக்கக் காலக் கைபேசியில் குறுஞ்செய்திப் பரிமாற்றம் அதிக அளவில் இருந்தது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகச் செய்திகளைத் தட்டச்சுவதற்குப் பதிலாக அதற்கு இணையாகப் படங்களை அனுப்பலாம் என அந்த நிறுவனம் தீர்மானித்தது.

குரிதா அதற்கான படங்களை உருவாக்கத் தொடங்கினார். வானிலை, வேலை, போக்குவரத்து என வெளி விஷயங்களைத் தெரிவிப்பதற்கான குறியீட்டுச் சித்திரங்களை அவர் வடிவமைத்தார். அதுபோல் காதல், பிரிவு, அரவணைப்பு, ஆதரவு, நம்பிக்கை என மனதை வெளிப்படுத்தும் சித்திரங்களையும் அவர் உருவாக்கினார்.

இவர் உருவாக்கிய 176 பிக்டோகிராம் சித்திரங்கள், நவீன ஓவியத்துக்கு இணையாகக் கொண்டாடப்பட்டன. அதன் அசல் வடிவம் நியூயார்க் நவீன ஓவிய அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதே அதற்குச் சாட்சி. ஒவ்வோர் ஆண்டும் புதிய எமோஜிகள் காலத்துக்குத் தகுந்தாற்போல் கூடுதலாகச் சேர்த்து அந்த மொழியை வலுப்படுத்தும் வேலையில் எமோஜிபீடியா அமைப்பு ஈடுபட்டுவருகிறது. எமோஜிபீடியாவின் முதன்மை ஆசிரியர் கீத் ப்ரோணி. இவர்கள் எமோஜிக்களை உருவாக்கி திறன்பேசி, சமூக ஊடகங்களுக்குக் கையளிக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x