Published : 13 Feb 2023 06:18 AM
Last Updated : 13 Feb 2023 06:18 AM
புதுச்சேரி: தொழிலாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் எளிதாக சுமை தூக்கும் கருவியை உருவாக்கி புதுச்சேரி அரசு பள்ளி மாணவி தீபிகா சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி கணுவாப்பேட் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தீபிகா. இவர் அறிவியல் ஆசிரியை அனுசுயா வழிகாட்டுதலோடு தொழிலாளர்கள் எளிதாக சுமை தூக்குவதற்கான கருவியை உருவாக்கியுள்ளார்.
மாணவியின் இந்த படைப்புக்கு புதுச்சேரியில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்தது. அமைச்சர் பாராட்டு இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் தீபிகாவின் படைப்பு புதுச்சேரி மாநில அளவில் 3-வது பரிசை வென்றது. அவருக்கு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பரிசு வழங்கி பராட்டினர்.
புதிய கருவியை வடிவமைத்தது குறித்து தீபிகா கூறியதாவது: மூங்கிலில் தயாரிக்கலாம் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அதிக கனமான பொருட்களை தூக்கும் போது காயமடைகின்றனர். தசை எலும்பு கோளாறு, கழுத்து வலி, தலை மற்றும் கண் அசைவு கோளாறு, முதுகெலும்பு பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
மிகப்பெரிய அல்லது அதிக எடையுள்ள சுமைகளை சுமப்பதாலும் ஏற்படும் காயங்கள் மற்றும் சுளுக்கு ஆகியவை தொழிலாளர்களுக்கு பொதுவான ஆபத்துகளாகும். எனவே, முதுகு மற்றும் தலையில் அதிக எடையை சுமந்து செல்லும் தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் விதமாக எளிதாக சுமை தூக்கும் கருவியை வடிவமைத்தேன்.
இது உடல் முழுவதும் எடையை பிரித்து கொடுக்கிறது. முதுகெலும்பு பிரச்சினைகள் மற்றும் எலும்பு சிதைவை தடுக்கிறது. முதுகு மற்றும் தலையில் சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்களை இக்கருவி மூலம் காப்பாற்ற முடியும். மூங்கில் அதிகம் கிடைக்கும் இடங்களில் இதை மூங்கிலில் தயாரிக்கலாம். மற்ற இடங்களில் இதை உலோகம், பிளாஸ்டிக், பிவிசி பைப் போன்ற பொருட்
களாலும் செய்யலாம்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஸ்க்ருவை (screw) பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் தயாரிப்பை மாற்றலாம். கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும். இது மடிக்கக் கூடியது மற்றும் பணியிடத்துக்கு எடுத்துச் செல்ல எளிதானது. குறைந்த உள்கட்டமைப்புடன் எளிதாக தயாரிக்கலாம்.
இவ்வாறு தீபிகா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT