Published : 14 Dec 2022 06:15 AM
Last Updated : 14 Dec 2022 06:15 AM
"நாளை நாம் பார்க்கப் போகும் பாடம் வளரும் வணிகம். அந்தப் பாடத்தை செயல்பாட்டு வழி கற்றல் வகுப்பாக வைத்துக் கொள்வோம்" என்று கூறி மாணவர்களை 5 குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைப்பு கொடுத்து அடுத்த நாள் தயாராக வரும்படி கூறினேன்.
வணிகர்களாகவே மாறிய மாணவர்கள்: மறுநாள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மாணவர்கள் வகை வகையாய் வணிகக் கடைகளைப் பரப்பி வரிசை கட்டி நின்றனர். பார்ப்பதற்கே வணிகக் கடைகளுக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்தியது. மாணவர்கள் வணிகர்களாக மாறி இருந்தனர். "வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், தக்காளி, வெங்காயம்" என்றும் "பேப்பர் பேப்பர் பழைய பேப்பர்" என்றெல்லாம் மாணவர்கள் வியாபாரிகள் போல கூவி விற்க நுகர்வோராய் நானும் நெருங்கிச் சென்றேன். விலைகேட்டு விபரம் அறிந்தேன்.
தங்களிடமிருந்த பொருட்களை வைத்தே எழுது பொருள் அங்காடியை அற்புதமாய் உருவாக்கியிருந்தனர். விலைப் பட்டியலோடு துணிக் கடைகளைக் காட்சிப்படுத்தி இருந்தனர். நுகர்வோர் வரிசையில் நானும் ஒருத்தியாய் நகர்ந்து சென்றேன்.
வணிகம் சார்ந்த கற்பித்தலும் கற்றலும் வகுப்பறையில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தன. பாடம் சார்ந்த, சாராத பல நிகழ்வுகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். வணிகம் சார்ந்த அவர்களின் புறவெளி கற்றல் செயல்பாடுகளின் வழி அவர்களுக்குக் கை கொடுத்தது. சிறுவணிகம் செய்வோரிடம் நுகர்வோரான மாணவர்கள் பேரம் பேச, மாணவன் ஒருவன் இப்படி அவர்களிடம் பேரம் பேசாதே. பாவமல்லவா அவர்?
பெரிய கடைகளில் என்ன விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கிறாயே? என்று கூற கரவொலி அதிர்ந்தது. மாணவர்களின் குதூகலம் வாசல்வரை எல்லோரையும் வரவேற்று நின்றது. மகிழ்வான கற்றல். கூடவே கற்பித்தலும் போட்டி போட்டுக் கொண்டன. பண்டமாற்று வணிகத்தை மாட்டு வண்டிகளும் கடல்வழி வணிகத்தைக் கப்பலிலும் அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர். அக்கால வணிகத்தையும் இக்கால வணிகத்தையும் வேறுபடுத்திக்காட்டியது அற்புதம்.
வணிகம் குறித்த தகவல்களை நான் கதையாகக் கூறுகிறேன் என்று அதுவரை பேசாத ஒரு மாணவன் கூற வகுப்பே கைதட்டி ஆரவாரம் செய்ய முகமெல்லாம் புன்னகையுடன் கதையைக் கூறி முடித்தான்.
இணைய வழி வணிகத்தை இருவர் இணைந்து நடித்துக் காட்ட, நேர்மையும் நாணயமும் இரு விழியாய் அவர்களிடம் ஒருமித்து இருந்தன. சமூக அக்கறையோடு கூடிய கல்வியே ஒரு மனிதனை உருவாக்குகிறது. சிந்தனையில் மாற்றம் என்பதையும் இந்த வகுப்பறை சொல்லாடல்கள் எடுத்துக் கூறியது வியப்பாக இருந்தது.
பலவிதமான பதில்கள்: வணிகம் குறித்து நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள் என்று ஒவ்வொருவராகக் கூறுங்கள் பார்க்கலாம் என்று கேட்டதற்கு நேர மேலாண்மை, உதவி செய்யும் மனப்பான்மை, நினைவாற்றல், எச்சரிக்கை உணர்வு, கவனம், தொலைவைக் கணக்கிடுதல்,பொருட்களின்தரம், விலை, கடையில் உள்ள பொருட்களை அறிதல்,பட்டியலிடுதல், பார்வையிடுதல், ஏற்றுமதி, இறக்குமதி தேவையை அறிதல், வணிகரின் நிலை, பேசும் விதம், அவர்களின் நேர்மை,உழைப்பு, நம்பிக்கை என்று பதில்கள் வந்தவண்ணம் இருந்தன.
எப்படி இத்தனை பதில்கள். இப்படியெல்லாம் நாம் கூட யோசித்தது இல்லையே, ஓ! இத்தனை விஷயங்கள் வணிகத்தில் உள்ளதா? ஆம் உள்ளது என்று நிரூபித்துவிட்டார்கள் ஆறாம் வகுப்பு மாணவர்கள்.
வணிக உறுதிமொழி: கடைகளுக்குச் செல்வோம். பொருட்களைத் தரம் பார்த்து, எடை பார்த்து வாங்குவோம். தேவையானவற்றை மட்டுமே வாங்குவோம். ஏமாறமாட்டோம், ஏமாற்றவும் மாட்டோம் என்று கூறினர். கற்றல் வெளிப்பாடு செயல்பாடாக மாறும் என்ற நம்பிக்கையோடு மாணவர்களுக்குப் பாராட்டு கூறி நிறைந்த மனதுடன் நன்றி கூறி விடைபெற்றேன். - கட்டுரையாளர்: தமிழாசிரியர், எஸ். ஆர். வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT