Published : 14 Dec 2022 06:02 AM
Last Updated : 14 Dec 2022 06:02 AM

தமிழகத்துக்கு தேவையான கல்விக்கொள்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி

சென்னை: தமிழகத்துக்கு தேவையானதை உள்ளடக்கிய புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியளித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில்அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் துறைசார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விவாதித்து அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி நடப்பு மாதாந்திர அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நிர்வாகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுதவிர கற்றல் செயல்பாடுகளில் பின்தங்கிய 254 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியும் தரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, ‘‘கப்பலுக்கு கேப்டன் போல் பள்ளிகளை வழிநடத்தும் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்குதான் உள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியை திறம்பட நிர்வகிக்க வேண்டும். யாரும் நம்மிடம் கேள்வி கேட்காதவாறு பணியாற்ற வேண்டும். அதற்கு பக்கபலமாக இந்த அரசு துணை நிற்கும்’’ என்றார்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில்மகேஸ் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போது, ‘‘மாநில கல்விக் கொள்கையின் அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது தமிழகத்துக்கு எது தேவையோ அதை உள்ளடக்கியதாக மாநில கல்விக் கொள்கை இருக்கும். அனைவரின் கருத்துகளையும் பரிசீலனை செய்து இறுதி முடிவுகளை அதற்கான குழுவினர் மேற்கொள்வார்கள்’’ என்றார்.

சென்னை இலக்கியத் திருவிழா: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜனவரி 6 முதல் 8-ம் தேதி வரை"சென்னை இலக்கியத் திருவிழா' நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான இலட்சினை அறிமுக விழாவும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி கலந்து கொண்டுஇலட்சினையை அறிமுகப்படுத்தினார். இதில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் பொது நூலக இயக்ககத்தின் மூலமாக தமிழகத்தில் வைகை, காவேரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கியத் திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் நிகழ்வாக பொருநை இலக்கிய திருவிழாவானது திருநெல்வேலியில் நவம்பர் 26, 27 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இலக்கியத் திருவிழா ஜனவரி 6 முதல் 8 வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் இலக்கிய படைப்புகள், பண்பாட்டின் உச்சங்கள் என இலக்கிய வாசகர்களுக்கான அரங்கும்; கல்லூரி மாணவர்களை இலக்கியம் நோக்கி வழிநடத்தும் வகையில் சிறந்த ஆளுமைகளின் உரையாடலுடன் கூடிய மாணவர்களுக்கென தனி அரங்கும்; சிறுவர்களுக்கு நமது இலக்கிய உலகை திறந்துகாட்டும் கதை, பாடல், நாடகம் வழியாக கடத்தும் வகையில் சிறுவர் இலக்கிய அரங்கும், திரை மொழியாக உலக, இந்திய சினிமாக்களை அதில் தேர்ந்த ஆளுமைகளைக் கொண்டு காட்சி அரங்கும் அமையும்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களின் நிகழ்த்துகலைகளும், பொம்மலாட்டம், நாடகம் மற்றும் மரபுசார் விளையாட்டுகள் இடம்பெறும்.மூன்று நாள்களும் மக்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் நமது கலாசாரம் சார்ந்து நாடகம், நிகழ்த்து கலைகளும் நடைபெறும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் வகையில் அவர்களுக்கு படைப்பாற்றலுடன் எழுதுதல், பேச்சுப் போட்டி, கவிதைக்கு மெட்டமைத்தல், இலக்கிய மீம்ஸ், இலக்கிய சுவரொட்டிகள் உருவாக்குதல், நூல் திறனாய்வு, கதை எழுதுதல் என பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x