Published : 14 Nov 2022 06:02 AM
Last Updated : 14 Nov 2022 06:02 AM

இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் “குபாசிகலு” சிறார் படம் திரையிடப்படுகிறது

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் 4-வது சிறார் திரைப்படமாக கன்னட மொழி படமான குபாசிகலு (CUBBACHIGALU) குழந்தைகள் தினமான இன்று திரையிடப்படுகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்ற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக கலை, இலக்கியம், இசை, நாடகம், ஓவியம் உள்ளிட்ட கல்வி சாரா செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிட வேண்டும் என்றுபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு திரைப்படம் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, தமிழகம் முழுவதும், ஈரானிய திரைப்படமான “சில்ரன்ஆஃப் ஹெவன்” திரையிடப்பட்டது. படத்தை திரையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாட உலக சினிமா ஆர்வலர்களும், திரைத்துறை ஆளுமைகள் பலரும் மாவட்டம் தோறும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சி இந்திய அளவில் புது முயற்சியாக கவனம் பெற்றது.

இதையடுத்து அக்டோபர் மாதத்திற்கான திரைப்படமாக “தி ரெட் பலூன்" திரையிடப்பட்டது. உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘தி கிட்’ திரைப்படம், ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’, பிரெஞ்சு மொழி குறும்படமான ‘தி ரெட் பலூன்’ ஆகிய மூன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சிறார் திரைப்படங்கள் இதுவரை தமிழக அரசு பள்ளிகளில் திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படமாக கன்னட மொழி படமான குபாசிகலு (CUBBACHIGALU) குழந்தைகள் தினமான இன்று (நவ.14) திரையிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x