Published : 08 Nov 2022 06:04 AM
Last Updated : 08 Nov 2022 06:04 AM
சென்னை: ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 126 ஆதி திராவிடர் நல பள்ளிகளுக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 126 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அமைச்சரின் அறிவிப்பை நிறைவேற்றும் பொருட்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 98 ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 28 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 126 பள்ளிகளுக்கு தேவையான ஆய்வுக்கூட உபகரணங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வாங்க வழங்க ஆதி திராவிடர் நல இயக்குநர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநருக்கு அனுமதி அளித்தும் இதற்கான ரூ.3 கோடியே 15 லட்சம் நிதி வழங்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் மாணவர்களின் பங்களிப்பு அதிகரிப்பதுடன் செயல்முறை தேர்வுகளில் அவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும். தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்கு தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT