Published : 04 Nov 2022 06:06 AM
Last Updated : 04 Nov 2022 06:06 AM

சமூக வலைத்தளம் வழியாக விழிப்புணர்வு: இடி, மின்னல் ஏற்பட்டால் பாதுகாப்பாக இருப்பது எப்படி? - தத்ரூப காட்சிகளுடன் 2 வீடியோக்கள் வெளியீடு

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடி, மின்னல், புயல், சூறாவளியில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோவை மாநில பேரிடர்மேலாண்மை முகமை வெளியிட்டுள்ளது. இதனை, டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காணலாம்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடி, மின்னல், புயல், சூறாவளி ஏற்படும் போது பொதுமக்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டும், குறிப்பாக வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும்போதோ, வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போதோ மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை, மாநில நிவாரண ஆணையம், வருவாய் நிர்வாக ஆணையர் சார்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு வீடியோக்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காணலாம்.

மரத்தடி தவிர்க்கவும்: வீடியோ பதிவில் இடம் பெற்றிருப்பதாவது: வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் மழை வரப்போகிறது என்று நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால், முன்னறிவிப்பு இன்றி திடீரென வருவது இடி, மின்னல்தான். நாம் வீட்டுக்கு வெளியில் இருக்கும்போது காதைப் பிளக்கும் வகையில் இடியுடன்கூடிய, மின்னல்ஏற்பட்டால், உடனடியாக இரு காதுகளையும் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் செவித்திறன் குறைபாட்டில் இருந்து தப்பிக்கலாம். உயரமான மரங்கள்தான் எளிதில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும், அதனால் மரங்களின் அடியில் நிற்கவே கூடாது. திறந்த வெளியில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். மின்னலின் போது நீரில் நீந்தக் கூடாது, நீரில் மின்னல் தாக்கினால் மின்சாரம் பாய்ந்து உடனடியாக உயிருக்கு ஆபத்து நேரிடும். அதுபோல புயல், சூறாவளி, பெருவெள்ளம் வந்தால் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று மற்றொரு வீடியோ விளக்குகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில்தாழ்வான பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். முக்கிய ஆவணங்களான ஆதார்அட்டை, ரேசன் அட்டை, வீட்டுப்பத்திரம் போன்றவற்றை பாதுகாப்பான இடத்தில் வைப்பது அவசியம்.பேட்டரி டார்ச்லைட், ரேடியோ,கைபேசி, போன்றவற்றை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். சமையல் எரிவாயு கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை அணைத்து வைக்க வேண்டும்.

உதவி எண்கள்: வீட்டின் ஜன்னல்கள், கதவுகளை பாதுகாப்பாக தாழ்பாள் போட்டு மூடிட வேண்டும். அருகில் இருப்பவர்கள் வெள்ளம் வந்துவிட்டது என்று சொல்வார்கள், அத்தகைய வதந்திகளை நம்பக்கூடாது. ஏதேனும் முக்கிய செய்தி இருந்தால் அரசாங்கமே ரேடியோ, தொலைக்காட்சி மூலம் அறிவிக்கும். உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், குடிநீர் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு பாதுகாப்பான இடத்திற்கோ அல்லது தமிழ்நாடு புயல் பாதுகாப்பு மையத்திற்கோ சென்றுவிட வேண்டும்.

புயல், பெருவெள்ளம், சூறாவளி ஏற்படும்போது பழைய கட்டிடம் அருகிலும், மரத்தின் அடியிலும் நிற்கக்கூடாது. அதிகாரப்பூர்வமாக புயல்எச்சரிக்கை விடுத்த பிறகு மாடியில்இருந்து வேடிக்கை பார்ப்பதை தவிர்ப்பது அவசியம். இவ்வாறு இடி, மின்னல், புயல், சூறாவளி, பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் இவையாவும் தத்ரூபமான காட்சிப் படங்களாகவும், அனிமேஷன் காட்சிகளாகவும் வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டு வீடியோக்களும் 6 நிமிடங்கள் வரை ஓடுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு மாநில நிவாரண ஆணையம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். மாநில கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077. வீடியோ லிங்க்: bit.ly/3FHspGO, bit.ly/3Up9nsS

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x