Published : 31 Oct 2022 06:02 AM
Last Updated : 31 Oct 2022 06:02 AM
குன்னூர்: சாரணர் இயக்கம், பிறருக்கு உதவும்மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஸ்டேன்லி பார்கில், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மேற்கு மண்டல முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், சாரணசாரணியர் இயக்கத்தின் மாநிலத்தலைவருமான அன்பில் மகேஸ்பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பேசியதாவது: மாணவர்களிடையே நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகிய நற்பண்புகளை வளர்ப்பது சாரணர் இயக்கம் ஆகும். முதல்வரின் ஆதரவால் முதன்முறையாக மேற்கு மண்டல அளவில் முகாம் நடைபெறுகிறது. இதற்காக பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்கள் சமூகத்தில் சரியான வாழ்க்கை வாழ்வதற்கும், வெளிச் செயல்பாடுகளில் தங்களின் முழுத்திறன்களை வெளிப்படுத்துவதற்கும் சாரணியம் வழிவகுக்கிறது. சாரணியம் நீச்சல், நடைப்பயணம் உள்ளடக்கிய பலவெளிச் செயல்பாடுகளை கற்றுக் கொடுப்பதனை முறையாக கொண்டுள்ளது. தொடர்ந்து இந்த முகாம் மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதனை ஒவ்வொருவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT