Published : 27 Oct 2022 06:06 AM
Last Updated : 27 Oct 2022 06:06 AM
சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க பிரத்யேகமாக TNSED Attendance என்ற புதிய செல்போன் செயலியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது. இப்புதிய செயலி முதன்முதலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது. பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. கரோனா காலக் கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அப்போது ஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் படிப்படியாக பழகிப்போய்விட்டது. கல்வி மட்டுமல்லாது பெரும்பாலான பணிகளும் ஆன்லைன் மூலமே நடைபெற்றது.
கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க பள்ளிக் கல்வித்துறை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க "பயோ மெட்ரிக்" முறையில் வருகைப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், “எமிஸ்" செயலி மூலம் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் வருகைப் பதிவு காலையிலும், பிற்பகலிலும் செய்யப்படுகிறது. எமிஸ் செயலி, வருகைப் பதிவுக்கு மட்டுமல்லாமல் மேலும் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நெட்வொர்க் கிடைக்காமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். வருகைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆன்லைனில் செய்வதால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் மாணவர்களின் கல்வியை மட்டுமே மனதில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை புதுப்புது செயலிகளை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப்பதிவு மிகவும் முக்கியம் என்பதாலும், நெட்வொர்க் பிரச்சினைகளின்றி வருகைப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காகவும் புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது. அதற்கு TNSED Attendance என பெயரிடப்பட்டுள்ளது. இதனை சோதனை அடிப்படையில் தஞ்சாவூர்மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றுமுதல் (அக்.27) வருகைப் பதிவுக்கான புதிய செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த புதிய செயலியை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் வலம் வருகின்றன. இந்த செயலியை தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படுத்தும்போது ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. புதிய செயலி குறித்து தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து கிடைக்கும் முடிவுகள் அடிப்படையில் செயலியை கல்வி மேலாண்மைத் தகவல் மையம் மூலம் மேம்படுத்தி தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இந்த புதிய செயலியை பயன்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளனர். முதலில் "டிஎன்எஸ்இடி ஸ்கூல்ஸ்" என்ற செயலியில் இருந்து "லாக்அவுட்" செய்ய வேண்டும். பின்னர் TNSED Attendance என்ற செயலியை "பிளே ஸ்டோரில்" இருந்து பதிவிறக்கம் செய்து, "இன்ஸ்டால்" செய்ய வேண்டும். அதில், பழைய "லாக்கின் ஐடி" மற்றும் "பாஸ்வேர்டை" பதிவு செய்து லாக்-ன் செய்ய வேண்டும். இந்த செயலியைப் பயன்படுத்தும்போது ஏதாவது பிரச்சினைகளை சந்தித்தால் அதனை "ஸ்கிரீன் ஷாட்" எடுத்து அதனை அந்தந்த வட்டார ஆசிரியர் பயிற்றுனருக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அக்டோபர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை மாலை 3 மணி முதல் 4:30 மணிவரை நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டத்தில் பள்ளியை மேம்படுத்துவதற்கான பணிகள், கட்டமைப்பு வசதிகள், கழிவறை, குடிநீர் வசதிகள், மாணவர்களின் கற்றல், ஆசிரியர் பயிற்றுவித்தல் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வளர்ச்சிக்குரிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இவற்றுடன் பள்ளியின் வளர்ச்சியில் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்கஉதவக் கூடிய ‘டிஎன்எஸ்இடி பெற்றோர்' (TNSED Parents) என்ற புதிய செயலியும் அறிமுகப்படுத்தவிருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. அவை பெருமையின் அடையாளம் என்ற நிலையை எட்டுவதற்காக பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ளும் முயற்சியின் புதிய மைல்கல்லாக இந்த முயற்சி பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT