Published : 15 Oct 2022 02:24 PM
Last Updated : 15 Oct 2022 02:24 PM
நாளை மேதகு கலாமின் பிறந்தநாளைக் கொண்டாடும் பொழுது அவரது பூத உடல் நம்மிடையே இல்லை. அவரது வாழ்க்கையுடன் இணைந்து நம்மிடையே கலந்த பேச்சுக்களும், எழுத்துக்களும் நமது நினைவலைகளில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டு, அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்து என்று உயிர்ப்புடன் இன்றும் ஊக்குவிக்கின்றன. லட்சோப லட்சம் இளைஞர்களின் கனவு நாயகரான கலாம், எனது வாழ்க்கையிலும் அக்கினிச் சுடரைத் தூண்டி விட்டிருக்கிறார். எனது நினைவுப் பறவை காலம் என்ற வரையறையில் பதினாறு வருடங்கள் பின்னோக்கிப் பறந்து, வான்வெளி வழியே சிறகடித்து உதய்ப்பூர் அரண்மனைக்கு சென்று அமர்கிறது.
ஆனால்... என்ற கலாம்! - அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம் புன்முறுவலுடன், வாருங்கள் மயில்சாமி அண்ணாதுரை, வந்து இங்கு அமருங்கள், என்று தன் அருகில் அமர வைக்கிறார். தயங்கியபடி அமர்கிறேன். சில நிமிடங்களுக்கு முன்புதான், அரண்மனையின் பெரிய தர்பார் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அறிவியலாளர்கள் வீற்றிருந்த பேரவையில், பன்னிரண்டு அறிவியல் கருவிகளை உள்ளடக்கிய, சந்திரயான் 1-ன் வரைவு திட்டத்தைச் சமர்ப்பித்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருந்தேன். அந்த அவையின் நாயகராய் கலாமும் இருந்தார். தனியாக நம்மைப் பாராட்டப் போகிறார். அதற்கு நாம் எப்படிப் பதிலளிப்பது என்று எனது மனம் திட்டமிட ஆரம்பித்துவிட்டது.
நீங்கள் கொடுத்திருக்கும் சந்திரயான்-1 திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால்… இது எஸ்.எல்.வி.-யின் முதல் திட்ட இயக்குனர் கலாம். இதயம் பக்கென்று துடிக்க மறந்ததாய் உணர்ந்தேன். ஆனால், என்கிறார் கலாம்…நம் திட்டத்தில் அப்படி என்ன குறை என்றது எனது மனம். சந்திரயான்-1 ஏறத்தாழ 3,84,000கி.மீ.பயணித்து, நிலவைத் தொடாமல், நூறு கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக் கொண்டிருப்பதுபோல் இருக்கும் உங்கள் திட்டத்தில் ஒரு முழுமை இருப்பதாக எனக்குத் தெரியலையே என்றார் கலாம். சுதாரித்துக் கொண்டு , “சார் நம்ம பி.எஸ்.எல். வியை வைத்துக்கொண்டு இதுவே அதிகம். நிலவைத் தொட வேண்டுமானால் சந்திரயான்-1 எடை கூடிவிடும் அப்புறம் நிலவு வரை செல்வதே சிரமமாகிடுமே சார், நான் தயங்கியபடி.
சிரமமின்றி சிகரமா? - சிரமப்படாமல் சிகரத்தை தொட முடியுமா? கலாம் தனது சிறு புன்னகையுடன். சிறிய யோசனைக்குப் பின், தயங்கியபடி நான், நாம் நிலவுக்கு எடுத்துச் செல்ல இருக்கிற 12 கருவிகளில் ஐந்தோ ஆறோ போதுமென்று மற்றவைகளைக் கழட்டிவிட்டு விட்டால் நீங்கள் சொல்லியபடி நிலவைத் தொட்டுவிடலாம் சார். அதுக்கு மயில்சாமி அண்ணாதுரை எதுக்கு, நம்ம ஊர் ஆட்டோ சகோதரர்கள் கூட அதைச் செய்வார்கள்தானே... கொஞ்சம் மாற்றி யோசியுங்களேன் என்றார் கலாம்சார் அப்படின்னா ஒன்னு செய்யாலாம், திட்டம் இப்போது மற்றவர்கள் முன்னிலையில் அறிவித்தது அப்படியே நிலவைச் சுற்றி வரும்படி இருக்கட்டும். ஆனால், அவற்றுடன் ஒரு சிறு விண்கலன்களைப் பொருத்தி அதை நிலவில் மோதும்படிச் செய்யலாமா என கேட்டேன்.
“ம்…….”, கொஞ்சம் யோசனைக்குப் பின், வார்த்தைகளை எண்ணிக் கொண்டே சொல்லும் தொனியில், இப்போதைக்கு இது சரி தான்… ஆனால் … இந்தியாவின் பெருமையை உலகிற்கே சொல்ற மாதிரி இருக்க வேண்டும் நமது நிலவுப் பயணம்” என்றார் கலாம். கண்டிப்பா சார். சந்திரயான்-1லேயே இந்தியாவின் பெருமையை உலகம் சொல்லும் படியாகச் செஞ்சு காமிப்போம் சார் என்றேன். “வாழ்த்துகள்… பார்ப்போம் மயில்சாமி”கண்கள் சுருக்கிய புன்சிரிப்புடன் கலாம். நான்கு வருடங்கள் உருண்டோட, 14 நவம்பர் 2008-ல் பெங்களூரு சந்திரயான்-1 தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் நான். சண்டிகரிலிருந்து தனி விமானத்தில் பறந்து வந்த கலாம், கண்ணாடித் தடுப்புக்குப் பின்னால், மாதவன் நாயர், அலெக்ஸ், ராதாகிருஷ்ணன் போன்ற அறிவியலாளர்கள் புடைசூழப் பெரிய திரைகளைப் பார்த்தபடி.
சரித்திரம் படைத்த சமிஞ்சை: கலாமின் கருத்தால் முளைத்த “சந்திரயானின் மோதுகலன்”, தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து அனுப்பிய கட்டளைக்குப் பணிந்து சமர்த்தாய், தாய் கலத்திலிருந்து பிரிந்து, 100 கி.மீ. உயரத்திலிருந்து நிலவின் தரை நோக்கி விழுந்தது. கீழே விழ விழ, மோதுகலனில் வைத்திருந்த ஒரு கருவி, நிலவின் மிக மெல்லிய வளி மண்டலத்தில் நீரின் ஈரப்பதம் இருப்பதைக் காட்டும் சமிக்ஞை வலுத்தது. அது ஒரு சரித்திரம் படைக்கும் சமிக்ஞை என்று எனது மனது துள்ளிக் குதிக்கிறது. பயணத்தின் நிறைவாக, மூவர்ணக் கொடியுடன் பயணித்து நிலவின் தரையில் மோதியது அந்தக் கலன். வெற்றிப்புன்னகையுடன் வெளியே வருகிறேன். கலாம் கைகுலுக்குகிறார்.
வாழ்த்தப் போகிறார் என்று அவர் கண்பார்த்துப் புன்னகைக்கிறேன். “அடுத்தது என்ன?” கேட்டார் கலாம். “சந்திரயான்-2 சார்”, சுதாரித்துக் கொண்ட நான். சில மாதங்களில் சந்திரயானின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக நிலவில் நீரிருப்பு உலக அறிவியலாளர்களால் அங்கீகரிக்கப்படுகிறது. சில வருடங்களுக்குப் பின் “திருப்பு முனைகள்” என்ற அவரது புத்தகத்தில் உதய்ப்பூர் நிகழ்வையும் சந்திரயான்-1 கண்டுபிடிப்பையும் குறிப்பிட்டு, இந்தக் கண்டுபிடிப்பில் தனக்கும் ஒரு பங்கிருக்கிறது என கலாம் எழுதியிருப்பதைப் படித்தபோது மிகப் பெரிய பரிசு அவரிடமிருந்து வாங்கியதாய் பெருமைப்பட்டேன்.
- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை | கட்டுரையாளர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி, பெங்களூருவில் உள்ள தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT