Published : 15 Oct 2022 02:09 PM
Last Updated : 15 Oct 2022 02:09 PM

ஆசிரியர்கள் கொண்டாடும் ஆசான் கலாம் | ஆசிரியை பார்வையில் அப்துல் கலாம்

கலாவல்லி அருள்

மிகச்சிறந்த மனிதர், விண்வெளிப் பொறியாளர், ஏவுகணை நாயகர், பேராசிரியர், குடியரசுத் தலைவர் என பல்வேறு விதமாய், பிறர் கண்களுக்கு காட்சி அளித்த போதிலும், “பிரகஸ்பதி” என்ற நிலையிலேயே ‘அவர்’ என் கண்களுக்கு காட்சி அளிக்கிறார். ‘அவர்’ என்று நான் குறிப்பிடுவது யார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆம், நம் அனைவரின் நினைவிலும் நீங்காமல் நிறைந்து நிற்கும் அப்துல் கலாம்தான் அவர். ஆனால், இந்த “பிரகஸ்பதி’ என்பவர் யார்? பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவாகவும், நவக்கிரகங்களில் ஒருவராகவும் விளங்குகிறார். ஜோதிட சாஸ்திரப்படி, நவக்கிரகங்களில் மிகவும் விரும்பப்படுபவராகவும், சுப கிரகமாகவும் திகழ்பவர் குரு பகவான் எனப்படும் வியாழன் ஆவார். இவர் மற்ற கிரகங்களைவிட மிகவும் பெரியவர். இவர் ராஜ கிரகம் என்று அழைக்கப்படுகிறார். வியாழனுக்கு “குரு” என்றும் “பிரகஸ்பதி” என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. அறிவில் மிகச் சிறந்தவரான இந்த பிரகஸ்பதி, ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் என கருதப்படுகிறார்.

ஆம், அப்துல் கலாமும், ஒரு பிரகஸ்பதி தான். ஏனெனில், அவர் பேசிய பேச்சுக்கள், எழுதிய எழுத்துக்கள் அனைத்துமே, பிறரை பண்படுத்தக் கூடியவையாக இருந்தன. இருக்கின்றன. இனியும் இருக்கும். பிரகஸ்பதி என்னும் ஞான குருவாய், நான் அவரை பார்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? பிரகஸ்பதி போல், அறிவில் மிகச் சிறந்தவராக அவர் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து குழந்தைகளும் மேதைகளாக திகழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆசைப்பட்டதோடு மட்டுமல்லாமல், அதற்கான வழிகளை தனது எழுத்துக்களின் மூலமும், பேச்சுக்கள் மூலமும் அனைவருக்கும் எடுத்துரைத்தார். குரு என்பவர், பிறருக்கு ஒரு நல்ல முன் மாதிரியாய் திகழ வேண்டும். அப்துல் கலாம், இந்த உலகிற்கே ஒரு மிகச் சிறந்த முன் மாதிரியாய் திகழ்ந்தார்.
கலாம் மிகச் சிறந்த நேர்மறை பண்புகள் உள்ளவராக விளங்கியதோடு, அவர் இருக்கும் இடத்தில் மிகச் சிறந்த நல்ல அதிர்வலைகளை உருவாக்கியவர்.

குரு என்பவர் அனைவரின் மீதும் அக்கறையோடு இருக்க வேண்டும். குருவின் இந்த இலக்கணத்தையும் தாண்டி ஆகச் சிறந்த அக்கறை கொண்டவராக கலாம் விளங்கினார். எவ்வாறெனில், மானுடர்கள் பற்றிய அக்கறை மட்டுமல்லாமல், மரம், செடி, கொடிகள் மீதும் அக்கறையோடு இருந்தார். குரு என்பவர் இயற்கை மீது ஆர்வமுடையவராய் இருக்கவேண்டும். இயற்கை மீது ஆர்வம் மட்டுமல்லாமல், இயற்கையை காப்பதில் அக்கறையோடும் இருந்தார். ஒரு மரம் ஆண்டுக்கு 20 கிலோ கார்பனை உட்கொண்டு, 14 கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்வதால், ஆளுக்கு ஒரு மரம் வளர்த்து, இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, அதற்கு அடிகோலியவர். குரு என்பவர், தொலை நோக்குப் பார்வை உள்ளவராக இருக்க வேண்டும். 2020–ல் இந்தியா எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டியே சொன்ன தொலைநோக்குப் பார்வையாளர் தான் கலாம். குருவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அறிவுரைகள் எனில், அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்மொழிகள். ஆம்,தூக்கத்தில் காணும் கனவை மாற்றி, தூங்கவிடாமல் செய்கின்ற கனவை காணச் சொல்லியவர் அல்லவா, அவர். அதுமட்டுமல்லாமல், அதை நனவாக்கும் வழிமுறையையும் கற்றுத்தந்த குரு அவர்.

அனைவரிடமும் நற்பண்பை வளர்ப்பவர் குரு எனில், நகர்ப்புறம் கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி, பட்டி, தொட்டியெங்கும் உள்ள அனைத்து மாணவ - மாணவியர்களையும் சந்தித்து உரையாடி, அவர்களிடம் அறிவியல் ஆர்வத்தையும், தேசப்பற்றையும் வளர்த்தவர். குற்றமற்ற ஒருவராக அவர் இருப்பதாலும், அனைவருக்கும் ஏதோ ஒன்றை கற்றுத் தர வேண்டும் என்ற உந்துதலுடன் இறுதி மூச்சுவரை செயல்பட்டதாலும் அவரை “பிரகஸ்பதி” என்று நான் கூறுவது உசிதம்தானே. தன்னைப் பற்றி நினைக்கும் ஒவ்வொருவருக்குள்ளும், ஏதோ ஓர் நற் சிந்தனையை தூண்டிவிடக்கூடிய வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் கலாம். அவர் கூறியவற்றிற்கு உதாரணமாய் அவரே விளங்கியதால்தான் அவர் ஒரு பிரகஸ்பதியாய் என்னுள்ளே நிறைந்து நிற்கிறார். ஆம், அவர் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் அவர் இறப்பு ஒரு சரித்திரம். தன் மரணம் எப்படி சம்பவிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ, அப்படியே அவர் மரணம் சம்பவித்தது, அவரது தெய்வீகத் தன்மைக்கு சான்றல்லவா? என் மானசீககுருவான, பிரகஸ்பதி அப்துல் கலாம் வழியை பின்பற்றி நான் மட்டுமல்லாமல், அனைவரும் செயலாற்ற வேண்டும் என்பதே என் இதயம் நிறைந்த ஆவல். - கட்டுரையாளர் தலைமையாசிரியர், அரசினர் உயர் நிலைப்பள்ளி திருக்காலிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x