Published : 27 Sep 2022 06:04 AM
Last Updated : 27 Sep 2022 06:04 AM

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் வேலை: பள்ளிக் கல்வி பணியாளர்களுக்கு இடமாற்றம்

சென்னை: ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) பி.ஏ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய பின்வரும் நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

3 ஆண்டுக்கு மேல்

# அனைத்து பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத்தக்க வகையிலும் அனைத்துஅலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 1.6.2022 அன்றைய நிலையில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முகஉதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் முதன்மைகல்வி அதிகாரி அளவிலேயே இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

# மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற அறிவுறுத்த வேண்டும்.

மாவட்ட அளவில் கலந்தாய்வு

# 01.06.2022 அன்றைய நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு, பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும்.

# அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கோவை மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

நிர்வாக மாறுதல்

# அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

# பட்டியலில் உள்ளபடி மாறுதல்கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள், கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிக்கப்படும்.

யாருக்கு விலக்கு?

# தங்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும்போது மாவட்டத்திற்குள் பணியிடம் இல்லாத நிலையிலோ, பணியாளர் வேறு மாவட்டத்தைக் கோரும் போதோ, அப்பணியாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள, அவர்களின் பட்டியலைபள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும்.

# ஒரே பணியிடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிமாறுதல் கோரும் நிலையில், பணியாளர் பதவியில் சேர்ந்த நாளை முன்னுரிமையாக கருத வேண்டும்.

# 3 ஆண்டுகள் பணிமுடித்த பணியாளர்கள் கட்டாய மாறுதலுக்கு தகுதியுடையவராக இருந்தபோதிலும் சில பணியாளர்கள், எதிர்வரும் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அப்பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாறுதல் அளிக்க தேவையில்லை.

ஒரே நாளில் கலந்தாய்வு

# மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அப்பணியாளர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும்.

# பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சென்னை மாவட்டம்

# சென்னை மாவட்டத்தில் உள்ளபணியாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வி வளாக அலுவலக பணியாளர்கள் அனைவரையும் ஒரே அலகாக கருதி பள்ளிக் கல்வி ஆணையரகத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

மேற்கண்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி கலந்தாய்வை நடத்துமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று தொடங்குகிறது: பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இன்று (27-ம் தேதி) தொடங்கி 30-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x