Published : 26 Sep 2022 06:04 AM
Last Updated : 26 Sep 2022 06:04 AM
சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குளம், அணைகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. கனமழைபெய்தபோது பல அரசு பள்ளிகளில்மழைநீர் தேங்கியது. அதனால் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் சில அரசு பள்ளிகள் விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் மழைக்காலத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி பள்ளிகள் செயல்பட முடியாதநிலை ஏற்படக்கூடிய பள்ளிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று (செப்.26) தமிழகம், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 28, 29 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அடுத்த 2 நாட்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரிபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்கள் மட்டுமில்லாமல், பிற மாவட்டங்களிலும் மழை தேங்கும் அரசு பள்ளிகளை அடையாளம் கண்டு, மழை நீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு பள்ளிக் கல்வித்துறை நேற்று மீண்டும் உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அரசு பள்ளிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் மாணவ, மாணவியருக்கு உடல்நலக் குறைவு ஏற்படாமல் பெற்றோரும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசர அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT