Published : 19 Sep 2022 06:02 AM
Last Updated : 19 Sep 2022 06:02 AM

28 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்: 2 வாரத்தில் வழங்க அரசு போக்குவரத்து கழகங்கள் தீவிரம்

சென்னை: தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 28 லட்சம் மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செல்ல புதிய இலவச பஸ்பாஸ் அட்டை அடுத்த இரண்டு வாரத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 100 சதவீத இலவச பயணத்துக்கான பஸ்பாஸ்வழங்கப்பட்டு வருகிறது. தனியார்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.

இதற்கான கட்டணத்தை போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழங்குகிறது. இலவச பஸ்பாஸ் வழங்க நடப்பாண்டில் ரூ.928 கோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காகித அட்டையில் வழங்கப்பட்டு வந்த பஸ்பாஸூக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை கொடுக்க கூடுதல் நிதியும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி இடை நிற்றலை தடுக்கவும், மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வரவும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் ஏழ்மையின் காரணமாக நீண்ட தூரம் நடந்து சென்று படிக்க வேண்டிய சிரமமான நிலை அறிந்து இலவச பஸ்பாஸ்களை அரசு வழங்கி வருகிறது.

பஸ்பாஸ் வழங்கும் திட்டம் முதன்முதலில் 1996-97 ஆண்டில்தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரைமட்டுமே இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டு வந்தது. பிறகு பிளஸ் 2 வரைபடிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு பள்ளி படிப்பை முடித்து இளைஞர்கள் உயர்கல்வி பெற்று தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்திக் கொள்ள 2007-ம்ஆண்டு முதல் கல்லூரிகளில், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்பட்டன.

கரோனாவால் பழைய அட்டை: இந்நிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவச பஸ்பாஸ் அட்டை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் மாணவர்கள் சிரமமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்க கடந்த ஆண்டு அட்டையை நடத்துநரிடம் காண்பித்துப் பயணிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் போது பேருந்துகளின் ஓட்டுநரும் நடத்துநரும் கண்டிப்பாக நடந்து கொள்ளாமல் மாணவர்கள் ஏறி,பயணிக்க, இறங்க அனுமதிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்தநான்கு மாதங்களாக அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

ஏழு போக்குவரத்துக் கழகங்கள்: இந்நிலையில் தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் 28 லட்சம் பேருக்கு புதிய பஸ்பாஸ் தயாரித்து வழங்கும் பணி சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் நடந்து வருகிறது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: இலவச பஸ்பாஸ் அட்டை தயாரித்து வழங்க டெண்டர் விடப்பட்டு தமிழகம் முழுவதும் பஸ்பாஸ் வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளிகள் மூலம் மாணவர்களின் பெயர், பள்ளி முகவரி உள்ளிட்ட விவரம் சென்னை, விழுப்புரம், மதுரை, சேலம், கோவை, கும்பகோணம், திருநெல்வேலி ஆகிய ஏழு போக்குவரத்துக் கழகங்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு ஆண்டுக்குரிய பஸ்பாஸ் தயாரிக்கப்படும். இன்னும் இரு வாரத்தில் அட்டைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நடப்பாண்டில் தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 23 லட்சத்து 42 ஆயிரம் பேர் இலவச பஸ்பாஸ் பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x