

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும் தமிழக அரசு, மழைக்காலத்தில் பள்ளிகளில் தேங்கும் மழைநீரால் அவதிப்படும் மாணவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
மழைக்கு விடுமுறை அறிவிப்பதோடு மாவட்ட ஆட்சியர்கள் நின்றுவிடாமல், மழைநீர் தேங்கும் பள்ளிகளை கணக்கிலெடுத்து அந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும் என்று பெற்றோர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பருவமழை மட்டுமல்லாது பருவம் தவறியும், அவ்வப்போதும் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே கனமழை பெய்வதும் நீடிக்கிறது. தற்போது, "வட தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும் 4-ம் தேதி வரை மழை நீடிக்கும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, தேனி, அரியலூர், நீலகிரி, நாமக்கல், தூத்துக்குடி, தர்மபுரி, கன்னியாகுமரி உள்பட 24 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் 126.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அரியலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் இடிதாக்கியும், சுவர் இடிந்தும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். 9 கால்நடைகள் இறந்துள்ளன. கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் பகுதியாகவும், முழுமையாகவும் வீடுகள் சேதமடைந்துள்ளன.
காவிரி, கொள்ளிடம், வைகை,தென் பெண்ணையாறு உள்ளிட்ட ஆறுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பல மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஓகேனக்கல், கும்பக்கரை உள்ளிட்ட பல அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பூண்டி ஏரியில் 19 சதவீதம், சோழவரம் 12 சதவீதம், செங்குன்றம் 91 சதவீதம், செம்பரம்பாக்கம் 90 சதவீதம், வீராணம் 100 சதவீதம், தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. மழை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேங்கும் மழைநீர்
‘‘மழைக்காலத்திலும், மழைக்குப்பிறகும் தேங்கும் மழை நீரால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சுமார் 2,500 அரசு பள்ளிகள் மரத்தடியில் நடக்கின்றன. மழைக் காலத்தில் இப்பள்ளிகளின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மேலும், நூற்றுக்கணக்கான அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சினை நீடிக்கிறது. போதிய வடிகால் வசதிகள் இல்லாததாலும், தாழ்வான பகுதிகளில் பள்ளிகள் அமைந்திருப்பதுமே காரணம்’’ என்று தெரிவித்தனர்.
அடுத்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், மழைநீர் வடிகால்கள் மூலம் மழைநீரை வடியச் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வரும் தமிழக அரசு, மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரால் அவதிப்படும் மாணவர்களையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவரச அவசியம்.