Last Updated : 01 Apr, 2022 07:08 PM

1  

Published : 01 Apr 2022 07:08 PM
Last Updated : 01 Apr 2022 07:08 PM

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களும் தவிப்பு

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, பணப் பரிமாற்ற சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளால் ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் 38 நாட்களைக் கடந்து விடைதெரியாமல் நீடித்து வருகிறது. உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு இன்னல்களைக் கடந்து பத்திரமாக இந்தியா மீட்டு வரப்பட்டுள்ளனர். இதேபோன்று இந்தியாவில் இருந்து மருத்துவ படிப்புக்காக ரஷ்யாவுக்கு சென்ற மாணவர்கள் 16 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடந்தமாதம் விதித்த பொருளாதார தடை காரணமாக விசா, மாஸ்டர்கார்டு போன்ற முக்கிய ஏடிஎம் அட்டைகள் ரஷ்யாவில் வேலைசெய்யவில்லை. இந்த இரண்டு அட்டைகள் தான் உலக ஏடிஎம் பணபரிவர்த்தனையில் 90 சதவீதத்தை கொண்டுள்ளன.

இந்தியாவில் இருந்து ரஷ்யா சென்ற பெரும்பாலான மாணவர்கள் இந்திய வங்கிகளில் உள்ள கணக்குகளை அடிப்படையாக வைத்து, அதன் சர்வதேச ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுத்து வந்தனர். விசா, மாஸ்டர்கார்டுகள் இயங்காததால் ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அவர்களது கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் தவிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், போர் காரணமாக உணவு, சர்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே வாங்க முடியும். அந்த அளவுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமலும் பணப் பிரச்சினையாலும் பல மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இந்திய மாணவர்களின் பெற்றோர் இந்திய ரூபாயை டாலராக மாற்றி பின்னர் டாலரை ரூபிளாக மாற்றி தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதற்கான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், விலைவாசி உயர்வுடன் அதையும் சேர்த்து சமாளிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல மாணவர்கள் தங்களது வகுப்பில் படிக்கும் ரஷ்ய மாணவர்களிடம் கடன் வாங்கி நிலைமையை சமாளித்து வருவதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சில ரஷ்ய பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் ரூபாயை பெற்றுக் கொண்டு ரூபிள் வழங்கும் உதவியையும், போக்குவரத்து, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் இதுபோன்ற உதவிகள் கிடைக்கவில்லை. உக்ரைன் மாணவர்கள் சந்தித்த அளவுக்கு உயிருக்கு ஆபத்தான சூழல் இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக மாணவர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் இந்தியா திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று மாணவர்கள் தரப்பில் புலம்புகின்றனர். போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே இதுபோன்ற இன்னல்கள் தீரும் என்று இந்திய மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x