Published : 30 Mar 2022 08:23 PM
Last Updated : 30 Mar 2022 08:23 PM
கணக்குத் தணிக்கையாளர்கள் மற்றும் கணக்குத் தணிக்கை குறித்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்க இந்திய கணக்குத்தணிக்கையாளர் மையம் ஏற்பாடு செய்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கணக்குத் தணிக்கையாளர்கள் தணிக்கை பணிகளில் மட்டுமின்றி பொதுச்சேவைகள், நீதிபதிகள், எம்எல்ஏ, எம்பி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள், நடுவர் தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். அவர்களுக்கு தணிக்கைத்துறையில் உள்ள வாய்ப்புகள் மட்டுமின்றி, கூடுதலாக என்னென்ன துறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும் என்று ஆய்வு செய்வதற்கு 2011-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி, ‘சிஏ’ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது என்று ஐசிஏஐ மையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 2 மணி நேரம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி துவங்கி மே 1-ம் தேதி வரை 4 வாரங்கள் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. பிற்பகல் 12 மணிக்கு 2 மணி வரை பயிற்சி நடைபெறும். ஆரம்பநிலை, வழிகாட்டு நிலை என இரண்டு பிரிவாக இந்த பயிற்சி பிரிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பநிலையில் ஐஏஎஸ் தேர்வுக்கான அடிப்படை விஷயங்கள், தேர்வின் அம்சங்கள், படிக்க வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட விவரங்கள் கற்பிக்கப்படும். இதை முடித்தவர்கள் வழிகாட்டு நிலையில் சேர்ந்து படிக்கலாம். அதில் கணக்குத்தணிக்கை பின்னணியைக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் வழிகாட்டுவார்கள். கணக்குத் தணிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டி அழைத்துச் சென்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறச் செய்வதே இந்த பயிற்சியின் நோக்கம். இந்த பயிற்சி ஆன்லைனில் நடைபெறும். பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள கணக்குத் தணிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் வரும் 7-ம் தேதிக்குள் அதற்காக வழங்கப்பட்டுள்ள இணைப்பில் நுழைந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஐசிஏஐ அமைப்பு அறிவித்துள்ளது.
இணைப்பு விவரம்: https://live.icai.org/cmeps/
தற்போது நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் கணக்குத் தணிக்கையாளர்கள் மற்றும் கணக்குத்தணிக்கை படிக்கும் மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT