Published : 17 Nov 2021 06:27 PM
Last Updated : 17 Nov 2021 06:27 PM
குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நவம்பர் 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வழிகாட்டு நெறிமுறைகள் நவம்பர் 19-ம் தேதி வெளியிடப்படும்.
நவம்பர் 19-ம் தேதி குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தினத்தையொட்டி சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
ஏற்கனவே, போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்பட்ட பிறகு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோம்.
இந்த நிலையில் கோவை தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு காரணமாக நவம்பர் 19-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். முதல் நாள் பள்ளி தொடங்கும்போதே மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். கோவை சின்மயா பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிக்கு வந்தால் வரவேற்கிறோம்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பேட்டியின்போது திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சேகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT