Published : 12 Nov 2021 05:22 PM
Last Updated : 12 Nov 2021 05:22 PM
முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை இந்திய ராணுவ அதிகாரிகள் தொடர புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதற்காக இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பிரிவு பிரதிநிதியான மேஜர் ஜெனரல் விவேக் காஷ்யப், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் அமரேஷ் சமந்தராயா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் கூறுகையில், "இந்திய ராணுவத்துடன் (பயிற்சிப் பிரிவு) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய ராணுவ அதிகாரிகள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் முதுகலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர உதவுகிறது.
ஆயுதப் படைகளுக்குத் தேவைப்படும் எந்தக் கல்வி ஆராய்ச்சிக்கும் தயக்கமின்றி மத்தியப் பல்கலைக்கழகம் உதவும். எதிர்காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள துறைகளைத் தவிர்த்து முடிந்தவரை மேலும் பல்வேறு துறைகளில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு அதிகபட்ச உதவியை வழங்குவோம்" என்று தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பிரிவு பிரதிநிதியான மேஜர் ஜெனரல் விவேக் காஷ்யப் கூறுகையில், "நானோ அறிவியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, போர்த் திறனியல் மற்றும் இந்திய ராணுவத்தின் தேவைக்கேற்ப பல படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் அதிகமாக இளம் அதிகாரிகளை அனுப்ப இந்திய ராணுவம் முயற்சி செய்யும்" என்று தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் காஷ்யப், சர்வதேச உறவுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் புல முதல்வர் பேராசிரியர் சுப்ரமணியம் ராஜு உள்ளிட்டோருடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைப் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT