Published : 05 Nov 2021 06:38 PM
Last Updated : 05 Nov 2021 06:38 PM
அட்சயப் பாத்திரா திட்டப் பணிகள் முடிய ஒரு மாதம் ஆகும் என்பதால், மத்திய சமையல் கூடம் மூலம் வரும் 8-ம் தேதி முதல் மதிய உணவு தரப்படவுள்ளது.
புதுச்சேரியில் கரோனா பரவலையொட்டிக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டனர். கரோனா பரவல் குறைந்ததால் கடந்த செப்டம்பரில் 9 முதல் 12-வது வரை வகுப்புகள் தொடங்கின. நெடுந்தொலைவில் இருந்து குழந்தைகள் வந்தாலும் கரோனாவைக் காரணம் காட்டி மதிய உணவு தரப்படவில்லை.
தற்போது கரோனா பரவல் முற்றிலும் குறைந்துள்ளதால் வரும் 8-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு வரும் 8-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். அப்போது இக்குழந்தைகளுக்கு மதிய உணவு தரப்படுமா என்று கேட்டதற்கு ஆலோசிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பள்ளி திறக்கும் நாளில் இருந்து குழந்தைகளுக்கு மதிய உணவு தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி நவம்பர் 1-ம் தேதி அறிவித்தார். முன்பு புதுச்சேரி அரசே மதிய உணவுக் கூடங்கள் மூலம் மதிய உணவைத் தயாரித்து பள்ளிக்கு அனுப்பியது.
கடந்த காங்கிரஸ் அரசில் மதிய உணவு தரும் திட்டத்தை பெங்களூரைச் சேர்ந்த அட்சயப் பாத்திரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். நவீன இயந்திரங்கள் பொருத்தும் பணியும் நவீன சமையல் கூட கட்டுமானப் பணியும் நடந்து வந்தது. அட்சயப் பாத்திரா நிறுவனத்தின் மதிய உணவுக் கூடத்தை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று பார்வையிட்டார். அங்கு செய்த உணவை ருசி பார்த்தார். அங்கிருந்தோர் உணவுக் கூடம் செயல்படும் விதத்தை விளக்கினர். கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "பள்ளி திறக்கும் வரும் 8-ம் தேதி முதல் மதிய உணவு தர முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். அட்சயப் பாத்திரா திட்டப் பணிகளில் இன்னும் பத்து சதவீதப் பணிகள் பாக்கியுள்ளன. இப்பணிகள் முடிய ஒரு மாத காலம் ஆகும். இக்காலகட்டம் வரையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட மத்திய சமையல் கூடம் மூலம் உணவு தரப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT