Last Updated : 01 Nov, 2021 02:12 PM

1  

Published : 01 Nov 2021 02:12 PM
Last Updated : 01 Nov 2021 02:12 PM

புதுவையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி; பள்ளி திறந்தவுடன் மதிய உணவு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி விடுதலை நாள் உரையாற்றிய முதல்வர் ரங்கசாமி | படங்கள்:எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். வரும் 8-ம் தேதி பள்ளிகள் திறப்பு நாள் முதலே மதிய உணவு தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுவை சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையடுத்து புதுவை ஆளுநர் மாளிகையில் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இருப்பினும் இந்தியாவுடன் புதுவை இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்குப் பின் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதியன்று பிரெஞ்ச் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1-ம் தேதியன்று புதுவை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது 1962-ம் ஆண்டுக்குப் பின் புதுவையின் சுதந்திர தினம் நவம்பர் 1-ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 16-ம் தேதியாக மாற்றப்பட்டது.

புதுவையின் உண்மையான விடுதலை நாள் நவம்பர் 1-ம் தேதி என்றும் அன்றைய தினத்தையே விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைப் புதுவை விடுதலை நாளாகவும், அரசு விடுமுறை தினமாகவும் மாநில அரசு அறிவித்தது.

புதுவை அரசின் சார்பில் விடுதலை நாள் விழா இன்று (திங்கட்கிழமை) கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கடற்கரைச் சாலையில் கொடிக்கம்பமும், மேடையும் அமைக்கப்பட்டு அங்கு முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டுப் பேசும்போது, ’’நடப்பு நிதியாண்டில் இதுவரை 274 தகுதிவாய்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்விக்கட்டணத்தை முழுமையாகச் செலுத்துதல் என்ற திட்டத்தின் கீழ் ரூ.1.92 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக ரூ.3.18 கோடிக்கு 2461 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு நிதியுதவி தரப்பட உள்ளது. அதேபோல் கல்விக்கடனாக ரூ.97.8 லட்சம் தரப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் நாளில் இருந்தே குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்கி வந்த பள்ளி அரசுப் பள்ளியாக மாற்றப்படும்.

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கும் திட்டம் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் முறையின் மூலம் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேலும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’’ என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

விழாவில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x