Published : 01 Nov 2021 12:46 PM
Last Updated : 01 Nov 2021 12:46 PM

பள்ளிகள் திறப்பு; ஆரத்தி எடுத்து, மலர் தூவி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்குத் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது.

இதனிடையே, வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்துத் துறைகளும் முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8 வரையான வகுப்புகளுக்கு நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.

இதை அடுத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் முகக்கவசம் அணிந்து பெற்றோர் பாதுகாப்புடன் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் பள்ளிகளுக்கு வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செம்மநாம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் அட்சதை தூவியும் வரவேற்றனர்.

மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கி வகுப்புகளில் அமரவைத்து அரசின் விதிமுறைகள் குறித்து விளக்கமளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ மாணவியர் உற்சாகத்துடன் வகுப்பறைகளில் தமது நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x