Published : 31 Oct 2021 05:13 PM
Last Updated : 31 Oct 2021 05:13 PM
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்கள் எளிதில் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம் என முதல் முயற்சியிலேயே இந்திய வனப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றதுடன், தமிழகத்திலேயே முதலிடம் பெற்ற பழநி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த திவ்யா தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், சந்திராமணி தம்பதிகளின் மகள் திவ்யா (23). தந்தை தலைமையாசிரியராகவும், தாய் வருவாய்த் துறையிலும் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் படித்த திவ்யா, முதன்முறையாகக் கடந்த 2020 அக்டோபரில் நடந்த இந்திய வனப்பணிக்கான தேர்வை எழுதினார். சில தினங்களுக்கு முன்பு முடிவுகள் வெளியானதில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்திய அளவில் பத்தாவது இடத்தையும் பெற்று சாதித்துள்ளார். முதல் முயற்சியிலேயே வெற்றி என்பதையும், கிராமப்புறத்தில் இருந்து இந்த சாதனையை படைத்திருப்பதையும் பலரும் பாராட்டுகின்றனர்.
இதுகுறித்து திவ்யா இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது:
''சென்னையில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதற்கான முயற்சியாக வார விடுமுறை நாட்களில் பயிற்சிக்குச் சென்று வந்தேன். பொறியியல் படிப்பை முழுமையாக முடித்தபிறகு முழுநேரமாகத் தேர்வுக்குத் தயாராக பயிற்சி எடுத்தேன். முதற்கட்டமாக இந்திய வனப்பணிகள் தேர்வை கடந்த ஆண்டு அக்டோபரில் எதிர்கொண்டேன். முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றது, அதுவும் தமிழகத்தில் முதலிடத்தில் தேர்ச்சி என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிராமத்தில் இருந்து சென்று என்னால் சாதிக்கமுடிந்தது. எனவே சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து யாரும் அச்சப்படாமல் எதிர்கொள்ளவேண்டும். இன்னும் சொல்லவேண்டுமானால் கிராமப்புற மாணவர்கள் எளிதில் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 புத்தகங்கள் வரை அடிப்படைக் கல்வியைப் படித்து புரிந்துகொண்டாலே போதும். மேலும் தினமும் செய்தித்தாள்களை படிக்கவேண்டும்.
நகர்ப்புறங்களில் பயிற்சி மையத்திற்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்று இல்லை. வீட்டில் இருந்தே கூடுதல் தகவல்களை ஆன்லைனில் பெறலாம். இதற்கு முன்பு சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நிலைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் வழிகாட்டல்களை ஆன்லைனில் தேடிப்பெற வேண்டும். அவர்களின் அறிவுரைகள் பயன் தரும்.
தேவை எது தேவையில்லாதது எது என அறிந்து படித்தால் நேரம் மிச்சமாகும். அளவாகப் படித்தாலே போதும். டெக்னாலஜியை முறையாகப் பயன்படுத்தினால் நமக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன''.
இவ்வாறு திவ்யா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT