Published : 31 Oct 2021 03:49 PM
Last Updated : 31 Oct 2021 03:49 PM
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் எந்த அமைப்பினரும் உள்ளே வர முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக உள்ளார். மேலும், மாநில அளவில் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்ததற்கு இணங்க, உயர்நிலைக் குழு உருவாக்கப்பட்டு மாநில கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும்.
கரோனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களைத் தேடி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.
இல்லம் தேடிக் கல்வி திட்டம் முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் 2 வாரங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் வரப்பெறும் கருத்துகள், நடைமுறைச் சிக்கல்கள் போன்றவற்றை ஆய்வு செய்து, அவை களையப்பட்டு, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
இந்தக் கல்வித் திட்டம் திராவிடத் திட்டம் என்று முதல்வரே கூறியுள்ளார். எனவே, இதில் எந்த அமைப்பினரும் உள்ளே வர முடியாது. இந்தப் பணியில் ஈடுபடவுள்ள தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுப்பதைக் கண்காணிக்க மாநில- மாவட்ட- ஒன்றியம்- பள்ளி அளவில் என 4 குழுக்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கிறோம்.
இல்லம் தேடிக் கல்வி திட்டம் என்பது கடந்த 2 ஆண்டுகளாக பள்ளியில் சென்று மாணவர்கள் கற்காததைக் கற்றுக் கொடுக்கத்தான். எனவே, பள்ளிக் கல்வியில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT