Published : 18 Oct 2021 07:18 PM
Last Updated : 18 Oct 2021 07:18 PM
10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடவில்லை. அவ்வாறு வெளியான அட்டவணை போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.
புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும். தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறும்.
ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித்தாள்களும், மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2021-22) சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு நவம்பரில் தொடங்க இருக்கிறது.
இதற்கான கால அட்டவணை விரைவில் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், 4 முதல் 8 வார கால இடைவெளியில் முதல் பருவத் தேர்வு நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் என்று தகவல் வெளியானது. இதற்கிடையில் பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டதாகக் கூறி தேர்வுத் தேதிகள் இணையத்தில் வெளியாகின. எனினும் அவ்வாறு வெளியான அட்டவணை போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''முதல் பருவத் தேர்வு அட்டவணை என்று சமூக வலைதளங்களில் வெளியான தகவல் போலியானது. இது 10, 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து சிபிஎஸ்இ இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வத் தகவலையும் வெளியிடவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT