Published : 16 Oct 2021 01:25 PM
Last Updated : 16 Oct 2021 01:25 PM
புத்தகங்களைப் பயன்படுத்தி சரஸ்வதி தேவிக்கு கரூர் தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் புத்தகத் தேரை அமைத்துள்ளார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஓவியர் தங்க.கார்த்திகேயன் (40). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஓவியத்தின் மீது கொண்ட ஈடுபட்டால் பிளஸ் 2 முடித்துவிட்டு, கும்பகோணம் கவின் கல்லூரியில் 5 ஆண்டு ஓவியப் படிப்பில் பட்டம் பெற்றார்.
அதன்பின் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர், ஓவிய ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பத்தால் கரூர் வந்து தனியார் பள்ளி ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்கள், பழைய தாள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சக்கரங்கள் பொருத்திய இரும்பு ட்ராலி மீது, புத்தகங்களால் செய்யப்பட்ட தேரை தங்க.கார்த்திகேயன் அமைத்துள்ளார். தேரின் மையத்தில் சிறிய சரஸ்வதி சிலை உள்ளது. துணிக் கயிறால் வடமும், பிடித்து இழுத்துச் செல்வதற்கு ஏதுவாக பிளாஸ்டிக் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இது பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி சரஸ்வதி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பூக்கள் சூடப்பட்டு இரு நாட்களும் புத்தகத் தேருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விஜயதசமியையொட்டி புதிதாக பள்ளியில் சேர நேற்று வந்திருந்த குழந்தைகள், புத்தகத் தேரை இழுத்துவரச் செய்தனர்.
இதுகுறித்து ஓவிய ஆசிரியர் தங்க.கார்த்திகேயன் கூறும்போது, ’’ ஆசிரியர் தினத்தையொட்டி சாக்பீஸால் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவம் வரைந்திருந்தேன். கலர்ஸ் டே-வையொட்டி ஊசி முனையில் வண்ண நூல்களைப் பயன்படுத்தி கலர்ஸ் டே என்ற வார்த்தையை உருவாக்கினேன். இவை பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், விஜயதசமியை ஒட்டி நூல்களைப் பயன்படுத்தி பள்ளியில் சரஸ்வதிக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகக் கோயில் அமைத்திருந்தேன். தற்போது கரோனா முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் வித்தியாசமாக நூல்களைப் பயன்படுத்தி புத்தகத் தேர் அமைத்துள்ளேன்.
பள்ளி நூலகத்திலிருந்த 1,750 நூல்களைப் பயன்படுத்தி புத்தகத்தின் அளவு, எடை, கோணம் ஆகியவற்றை அளவிட்டு அவை சரிந்துவிடாத வகையில் விசிறி முறையில் இரண்டரை அடி உயரமுள்ள நான்கு தூண்கள், அதற்கு மேல் தலா அரை அடியில் 3 நிலைகள், பழைய தாள்களை மடித்து, வெட்டி, பசையோ அல்லது இதரப் பொருட்களைப் பயன்படுத்தாமல், ஒட்டாமல் பிற ஆசிரியர்கள் உதவியுடன் 10 நாட்கள் செலவிட்டு உருவாக்கினேன்.
இதற்காக சக்கரங்கள் பொருத்திய இரும்பு ட்ராலி தயார் செய்யப்பட்டது. தேர் சாய்ந்துவிடாமல் இருக்க அதனுள் 1,000 புத்தகங்களை அடுக்கி அதன் மேல் 750 புத்தகங்களைக் கொண்டு தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகைப் புத்தகங்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரும் நவ.1-ம் தேதி பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் பார்வையிட வசதியாக, புத்தகத் தேர் வைத்திருக்கப்படும்’’ என்று ஆசிரியர் தங்க.கார்த்திகேயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT