Published : 05 Oct 2021 04:52 PM
Last Updated : 05 Oct 2021 04:52 PM
ஆர்டிஐ மனுவுக்கு பதிலளிக்காத 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ’இளைய தலைமுறை’ என்னும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சங்கர் என்பவர் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களில் எத்தனை பேர் பி.சி., எம்பிசி, எஸ்சி, எஸ்டி, பிசிஎம், ஓ.சி. உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவரின் விவரத்தையும் அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஆர்டிஐ மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைக்கு சங்கர் மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பி இருந்தார். அதையடுத்துப் பள்ளிக் கல்வித்துறை பொதுத் தகவல் அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’மனுதாரரின் மனுவிற்கு உரிய காலக் கெடுவிற்குள் தகவல் வழங்குமாறு இந்தக் கடிதத்தின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் கீழ்க்காணும் மாவட்டங்களிலிருந்து தகவல் ஏதும் பெறப்படவில்லை என்றும், ஒருசில மாவட்டங்களிலிருந்து அரைகுறையான தகவல் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து மனுதாரர் தனது மனுவில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஆகவே, கீழ்க்காணும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரும் தகவலைச் சார்நிலை
அலுவலகங்களில் இருந்து பெற்றுத் தொகுத்து தங்கள் அலுவலகத்திலிருந்தே மனுதாரருக்கு நேரடியாக அனுப்பும் பொருட்டு மனுதாரரின் மேல்முறையீட்டு மனு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் தகவல் வழங்கிவிட்டு அதன் விவரத்தை இந்த அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. செங்கல்பட்டு
2. சென்னை
3. கடலூர்
4. தருமபுரி
5. திண்டுக்கல்
6. காஞ்சிபுரம்
7. ஈரோடு
8. கன்னியாகுமரி
9. கரூர்
10. கிருஷ்ணகிரி
11. மதுரை
12.மயிலாடுதுறை
13.பெரம்பலூர்
14.புதுக்கோட்டை
15.ராமநாதபுரம்
16. ராணிப்பேட்டை
17.சேலம்
18. சிவகங்கை
19. தென்காசி
20. திருச்சி
21. திருப்பத்தூர்
22.திருவாரூர்
23.திருவண்ணாமலை
24.வேலூர்
25.விருதுநகர்
ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மனுதாரர் கோரிய தகவல்களை அனுப்ப வேண்டும்’’.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT