Published : 05 Oct 2021 03:20 PM
Last Updated : 05 Oct 2021 03:20 PM
இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதில் சுமார் 30,000 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் கடந்த செப்.14-ம் தேதி வெளியிடப்பட்டது. முன்னதாகப் பொறியியல் படிப்புகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு 1,39,033 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 13 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றனர்.
இதில், சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்.17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் நடத்தப்படும். துணை கலந்தாய்வு அக்.19-ம் தேதியும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்.24-ம் தேதியும் நடக்கும். அக்.25-ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வு இன்று (அக்.5) தொடங்கியது. இதில் சுமார் 30,000 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர்.
இதற்கிடையே கலந்தாய்வில் பங்கு பெறும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பெயரைப் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் இன்று மற்றும் நாளை (5 மணிக்குள்) பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்கு அக்.7-ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும்.
அக்டோபர் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி, கல்லூரியை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் மாணவர்களுக்கு, அக்டோபர் 9ஆம் தேதி கல்லூரி சேர்க்கைக்கான இறுதி உத்தரவு இணையதளம் மூலம் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT