Published : 29 Sep 2021 02:57 PM
Last Updated : 29 Sep 2021 02:57 PM
தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் முடிவைத்தான் எடுக்க வேண்டி வரும். அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுவையை 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொகுதிதோறும் மருத்துவக் குழுக்களை அனுப்பி எம்எல்ஏக்கள் முன்னிலையில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலியார்பேட்டை தொகுதியில் காராமணிக்குப்பம் சாலை சக்திவேல் பரமானந்தா சுவாமிகள் சித்தர் பீடத்தில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமைப் பார்வையிட ஆளுநர் தமிழிசை இன்று வந்தார். முகாமில் அத்தொகுதியின் எம்எல்ஏ சம்பத், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:
"முகாமில் முதல் தடுப்பூசியே சிலர் இப்போதுதான் போடுகின்றனர். அது கவலை தருகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழலில் உள்ளோம். பல நாடுகளில் 3-வது அலை, 4-வது அலை என கரோனா தொடர்கிறது. இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளோம். இதற்கு முழுக் காரணம் தடுப்பூசிதான். புதுவையில் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தடுப்பூசி போடுபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.
அரசு சலுகைகள், திட்டங்கள் கிடைக்க தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்களா எனக் கேள்வி வரும் எனக் கூறியிருந்தோம். உடனே ஜனநாயகத்தில் கட்டாயப்படுத்தக் கூடாது என்கின்றனர். மக்கள் நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் கடுமையாகச் சொல்கிறோம்.
புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் 65 சதவீதத்தைத் தாண்டிவிட்டோம். 70 சதவீதத்தை எட்டினாலே இயற்கையாகவே மக்களிடம் தடுப்பு சக்தி உயர்ந்துவிடும். பாரத் பயோடெக் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கண்டறியும் முயற்சியில் உள்ளது. உண்மையில் கரோனாவால் அதிக பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாது.
தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகப் பாடத்திட்டத்தை நாம் பின்பற்றி வருகிறோம். இது தொடர்பாக முதல்வருடன் விவாதித்துள்ளேன். பள்ளிக் கல்வித்துறையும், அமைச்சரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிபுரிவோரில் தடுப்பூசி போடாதவர்கள் உடன் போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பின்பற்ற வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். தமிழகப் பாடத்திட்டத்தோடு இருப்பதால் தமிழக அரசின் முடிவைத்தான் எடுக்கவேண்டி வரும். அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும்."
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT