Published : 29 Sep 2021 01:47 PM
Last Updated : 29 Sep 2021 01:47 PM

கரோனா கால கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: சிஆர்ஒய் அமைப்பு வரவேற்பு

சென்னை

பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்புகளை ஈடு செய்ய சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள கற்பித்தல் வாசிப்பு இயக்கத்துக்கு சிஆர்ஒய் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஆர்ஒய் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''குழந்தைகள் உரிமைகளுக்காக கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் CRY (சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ) அமைப்பு, விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கித் தருவதால் குழந்தை உரிமை மீறல்களைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவிட் பாதிப்பு குழந்தைகளின் கல்விக்கான வாய்ப்பையும் கட்டமைப்பையும் பாதித்துள்ளது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிகளுக்கு விரும்பிச் செல்ல, கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் இணைப்போம் (Back to School- Bridge Course Program) திட்டத்தினை CRY நிறுவனம் 18 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், ஆரம்பக்கட்டமாக ராமநாதபுரம், சேலம், தருமபுரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் 1,107 குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, பள்ளிகள் செயல்படாத காலத்தில் இழந்த பாடங்களை அவர்கள் மீண்டும் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்து தொடர் கண்காணிப்பும் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, குழந்தைகளைப் பாதுகாக்க சமூக நலத்துறையின் மூலம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடு செய்ய "கற்பித்தல் வாசிப்பு இயக்கம்" எனும் சிறப்பு திட்டம் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து CRY நிறுவனத்தின் பொது மேலாளர் ஜான் ராபர்ட் கூறும்போது, "தமிழ்நாடு அரசின் திட்டம், அனைத்துத் தரப்பட்ட குழந்தைகளுக்கும் குறிப்பாக இணைய வழி மின்னணுக் கருவிகள் இல்லாததால் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளும் தொடர்ந்து கல்வியைப் பெறும் வாய்ப்புகளை உருவாக்கும்.CRY நிறுவனத்தின் "மீண்டும் பள்ளிகளில் இணைப்போம்" (Back to School) என்னும் திட்டமும் இதே இலக்கோடு அரசின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியில் சிறந்த முறையில் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும் என உறுதியாக நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் நேரடியாக இயங்காத காலத்தில், குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வந்ததை CRY நிறுவனம் ஆய்வில் கண்டறிந்தது. கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கும் குழந்தைத் திருமணம் எனும் பிரச்சினைக்கும் உள்ள நேரடித் தொடர்பை இது உறுதிப்படுத்தியது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளுக்கு இணையவழிக் கல்வி என்பது அறவே இல்லாத நிலையில், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் என்ற ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைக் காப்பது இந்தக் காலகட்டத்தில் அனைவரின் இன்றியமையாத கடமையாகும். பெருந்தொற்றுக் காலத்தில் விளிம்பு நிலை சமூக மக்களின் குழந்தைகளுக்கு, இடைவெளியில்லாமல் கல்வியைத் தொடர்வதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ய இம்மாதிரியான திட்டங்கள் அடித்தளமாக அமையும்''.

இவ்வாறு சிஆர்ஒய் அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x