Published : 28 Sep 2021 05:46 PM
Last Updated : 28 Sep 2021 05:46 PM

மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள்: சென்னை ஐஐடி இயக்குநர் பேச்சு

காணொலியில் நடைபெற்ற விஐடி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற வேந்தர் கோ.விசுவநாதன், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி.

வேலூர்

மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு ஏற்ப தங்களுடைய வேலைவாய்ப்பையும் வாழ்க்கையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று, விஐடி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் காணொலி வாயிலாக 36-வது பட்டமளிப்பு விழா இன்று (செப். 28) நடைபெற்றது. இதற்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும்போது, "மாணவர்கள் பாடங்களை ஆழப் படித்து அதன் நுணுக்கங்கள், அதன் கருவை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக மாணவர்கள் தாங்கள் படிக்கும் அனைத்துப் பாடங்களின் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நம் நாழ்வின் உயர்வுக்கு அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்வது அவசியம்.

பட்டம் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் இன்று முக்கியமான நாள். உங்கள் வாழ்வில் அடுத்த 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். மாணவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு ஏற்ப தங்களுடைய வேலைவாய்ப்பையும் வாழ்க்கையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்று நாம் இருக்கக்கூடிய உயர்ந்த நிலைக்கு நம்மைக் கொண்டுசென்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நன்றி உணர்வுடன் நினைவுகூர வேண்டும்" என்றார்.

பட்டமளிப்பு விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, "உயர்கல்விதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. நாட்டில் உயர்கல்வி சந்தித்து வரும் முக்கியமான சவால்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஆராய்ச்சி மேற்கொள்வதில் போதுமான ஆராய்ச்சியாளர்கள் இல்லாதது, நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறைவு. இவைதான் ஆராய்ச்சிகளில் சிறப்பாகச் செயல்படும் ஜப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகளுடன் நம்மை ஒப்பிடும்போது நாம் சற்று பின்தங்கியுள்ளோம்.

இந்தியாவில் உயர்கல்வி சந்தித்து வரும் பிரச்சினைகளில் போதிய நிதி வசதி இல்லாதது, கல்வி மற்றும் நிர்வாகத்தில் தன்னாட்சி இல்லாததும் காரணம். விஐடியில் கடந்த ஆண்டு 844 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்தனர். பொதுவாக மாணவர்கள் வேலையைத் தேடிச் செல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். நாம் வெளிநாடுகளுக்குப் பொருட்களை ஏற்றமதி செய்வதற்கும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் போதுமான வசதி நம்மிடம் உள்ளது" என்று தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 7,569 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்யநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x