Published : 25 Sep 2021 04:34 PM
Last Updated : 25 Sep 2021 04:34 PM
ஒற்றைப் பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு:
''முழு நேர முதுகலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2021-22ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான மேற்படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 30 வயது வரையிலான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் கல்வி உதவித் தொகை மட்டுமே வழங்கப்படும். உணவு, விடுதிக் கட்டணம் ஆகியவை வழங்கப்படாது.
இந்த உதவித்தொகையின்கீழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,200 தொகை வழங்கப்படும்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்
பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்படும். இதில் மாதந்தோறும் ரூ.3,100 தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கும் 30 வயதே வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களின் மேற்படிப்புக்காக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழிக் கல்விக்கு உதவித்தொகை கிடையாது.
மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2021''.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT