Published : 18 Sep 2021 01:44 PM
Last Updated : 18 Sep 2021 01:44 PM

ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிப்போர் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு

சென்னை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்‌, ஐஐஐடி, என்ஐடி மற்றும்‌ மத்தியப் பல்கலைக்கழகங்களில்‌ பயிலும்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மாணவ, மாணவிகள்‌ 2021-22ம்‌ கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்‌ தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பிற்படுத்தப்பட்‌டோர்‌ நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்‌, ஐஐஐடி, என்ஐடி மற்றும்‌ மத்தியப் பல்கலைக்கழகங்களில்‌ பட்டப்படிப்பு மற்றும்‌ பட்ட மேற்படிப்பு பயிலும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ மாணவ / மாணவிகளின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.2 லட்சத்திற்கு மிகாமல்‌ இருப்போருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர்‌ ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம்‌ ரூ.2 லட்சம்‌ வரை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2021-22ஆம்‌ கல்வியாண்டில்‌ புதிதாக விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான மாணவர்கள்‌ கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்களை நேரில்‌ அணுகியோ விண்ணப்பங்களைப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

மேலும்‌ மேற்படி 2021-22ஆம்‌ நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள்‌ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

கல்வி நிறுவனங்கள்‌ தங்களது சான்றொப்பத்துடன்‌ தகுதியான விண்ணப்பத்தினைப் பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2021-க்குள்‌ அனுப்பி வைக்க வேண்டும்‌ எனத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இயக்குநர்‌, பிற்படுத்தப்பட்‌டோர்‌ நல இயக்ககம்‌, எழிலகம்‌ இணைப்பு கட்டடம்‌, 2வது தளம்‌, சேப்பாக்கம்‌, சென்னை-5.
தொலைபேசி எண்: 044-28551462
"

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x