Published : 16 Sep 2021 01:40 PM
Last Updated : 16 Sep 2021 01:40 PM
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இதன்படி சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17ஆம் தேதி அன்று தொடங்குவதாக புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தொழில்நுட்ப இயக்குநரகத்தால் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 1,39,033 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதில் 87,291 பேர் மாணவர்கள். 51,730 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். இந்தப் பட்டியலில் 13 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றனர்.
இந்தக் கல்வி ஆண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
எனினும் தரவரிசைப் பட்டியல் வெளியானபோது சிறப்புப் பிரிவு கலந்தாய்வுக்கான தேதி மாற்றப்பட்டு, 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17ஆம் தேதி அன்று தொடங்குவதாக புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேர் கலந்துகொள்ள உள்ளனர். அரசுப் பள்ளி பிரிவில் விஸ்வநாதன் 197.9 கட் ஆஃப் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல 2-வது இடத்தில் சண்முகவேலும் (197.53), 3-ம் இடத்தில் கவிதாவும் (197.19) உள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது.
தரவரிசைப் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடியே தேதி மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. காலியிடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க 5 முறை கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT