Published : 12 Sep 2021 10:53 AM
Last Updated : 12 Sep 2021 10:53 AM
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி 61-வது வார்டு காட்டூர் காவிரி நகரில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16.25 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடைக்கான புதிய கட்டிடத்தை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்துவைத்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் திருச்சி மண்டல இணைப் பதிவாளர் தி.ஜெயராமன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.என்.சேகரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
’’நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரும்போது அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளன.
நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை செப்.15-ம் தேதிக்குப் பிறகு முதல்வரிடம் அளிப்போம். அதனடிப்படையில், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது. புத்தாக்கப் பயிற்சி சிறப்பாக நடைபெறுகிறது’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT