Last Updated : 03 Sep, 2021 05:47 PM

 

Published : 03 Sep 2021 05:47 PM
Last Updated : 03 Sep 2021 05:47 PM

துள்ளல் இசையில் ஓர் ஆசிரியப்பா!

இசைத் துறையில் தன்னளவில் பாடகராக, வாத்தியங்கள் இசைக்கும் கலைஞராகப் புகழ் பெறவேண்டும் என்னும் லட்சியத்தோடு இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆனால், இசையை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதோடு அவர்களையே பாடவைத்து ஒலிப்பதிவு செய்து அதை யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த உமாசங்கர். இதற்காகவே `மியூசிக் டிராப்ஸ்’ என்னும் யூடியூப் அலைவரிசையை நடத்திவருகிறார்.

திரைப் பாடல்களில் பெரிதும் கவனத்தைச் சிதறவிடும் குழந்தைகளுக்கு இடையில் இவரிடம் படிக்கும் குழந்தைகள் நம்முடைய பாரம்பரியமான கலைச் செல்வங்களைப் பற்றிய புரிதலோடு இருக்கின்றனர். கம்ப ராமாயணம், சங்க காலப் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், மத நல்லிணக்கப் பாடல்கள், தன்னம்பிக்கை பாடல்கள் போன்ற பல வகைமைகளிலும் குழந்தைகளைப் பாடவைத்திருக்கிறார் உமாசங்கர்.

சிறந்த கல்வியாளர், தத்துவ ஞானி, பாரத் ரத்னா விருது பெற்றவர், நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவராகிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5) கடந்த 1962 முதல் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அண்மையில் ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றி மாணவிகள் யாழ்நங்கை, இனியாள் ஆகிய மாணவிகளைக் கொண்டே இந்தப் பாடலைப் பாடவைத்திருக்கிறார் உமாசங்கர்.

“ஆசானே சிந்தனை தந்தவராம் – அவர்

வாழ்நாளை வென்றிட வந்தவராம்

ஒரு சேயாகச் சீராட்டியே

மறு தாயாகத் தாலாட்டுவார்..” எனத் தொடங்கும் பாடலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையேயான அன்பு, புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, மன்னிக்கும் தன்மை போன்ற ஆசிரியரின் பல நல்ல குணங்களையும் அழகுணர்ச்சியோடு தங்களின் மழலைக் குரலில் குழந்தைகள் பாட்டில் பட்டியலிடும் அழகை நாள் முழுவதும் ரசிக்கலாம்.

ஆசிரியர்களின் அருமை பெருமைகளை நயமான பாட்டாக வடித்திருக்கிறார் ஆத்தூர் சுந்தரம். பாடலுக்கான மெட்டை உமாசங்கர் அமைக்க இதமான, உறுத்தல் இல்லாத இசையை ஆண்ட்சன் டேவிட் அமைத்திருக்கிறார். வெவ்வேறு இடையிசையிலும் வாத்தியங்களின் இசைக் கலவையை மாற்றியிருப்பது, பாடலின் இறுதியை படிப்படியாகக் குறைந்துகொண்டே (Fade-Out) போவதுபோல் முடித்திருப்பது, பள்ளியிலிருந்து குழந்தைகள் பாடிக்கொண்டே வெளியேறும் காட்சியை மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வைக்கிறது!

ஆசிரியரை நீங்களும் பாடி வாழ்த்துங்கள்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x