Published : 01 Sep 2021 03:14 PM
Last Updated : 01 Sep 2021 03:14 PM

மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு: தேர்வு மையங்களும் அதிகரிப்பு

மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்காகப் பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) நடத்தப்படுகிறது.

அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2021-2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

கணினி வழித் தேர்வு

இந்தப் பொது நுழைவுத் தேர்வானது 2 மணி நேரம் கணினி வழியில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.

தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.16-ம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர், தங்களுக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்வு செய்து செப்டம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபரில் போர்ட் பிளேர் மற்றும் கேரளாவில் காசர்கோடு ஆகிய 2 இடங்களில் புதிதாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்களுக்கு: cucet.nta.nic.in

மாணவர்கள் விண்ணப்பிக்க: https://testservices.nic.in/examsys21/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYsjZOdyj8DuPcxGBqAK2Dxg17SOPYNi2Zee0LIuc/he என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x