Published : 26 Aug 2021 07:06 PM
Last Updated : 26 Aug 2021 07:06 PM
அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எம்எல்ஏ அப்துல் சமதுவின் பேச்சுக்குக் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ’தோழமை’ அமைப்பின் நிறுவனரும், குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளருமான தேவநேயன் கூறியதாவது:
’’தமிழ்நாடு சட்டப்பேரவையில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான அப்துல் சமது, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.
1.தொடர்ந்து பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனைக் களைய அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்புக் கொள்கை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் குழந்தை பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மேலும், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இதனை நடைமுறைப்படுத்தக் கூறியுள்ளது. நமது அண்டை மாநிலங்களில் குழந்தை பாதுகாப்புக் கொள்கை அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்புக் கொள்கையை (Child Protection Policy in all Schools) உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
2 .நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளைக் கலாச்சாரமாக்க அரசமைப்பு உரிமைக் கல்வியை (Constitution Rights Education) அனைத்துப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. அனைத்துப் பள்ளிகளிலும் முழு நேர மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக் குழந்தைகளின் சிறந்த நலனுக்காக மேற்கண்ட கோரிக்கைகளைச் சட்டப்பேரவையில் முன்வைத்த எம்எல்ஏ அப்துல் சமதுவைப் பாராட்டுகிறேன்.’’
இவ்வாறு தேவநேயன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT