Published : 26 Aug 2021 04:50 PM
Last Updated : 26 Aug 2021 04:50 PM
நீட் முதுகலைத் தேர்வை எழுத வெளிமாநிலத் தேர்வு மையங்களை மாற்றும் வாய்ப்பைத் தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கும், தேசிய தேர்வுக் கழகத்துக்கும் சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''முதுகலை நீட் தேர்வு விண்ணப்பப் பதிவில் தமிழ்நாடு மாணவர்களுக்கு 4 மணி நேரத்தில் மாநிலத்திற்கு உள்ளான மையங்களின் தெரிவு இணையப் பதிவில் தீர்ந்து போய்விட்ட நிலையில் தமிழ்நாட்டில் மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சருக்கு பிப்ரவரி 24, 2021-ல் கடிதம் எழுதினேன். அதற்கு பதில் அளித்த தேசிய தேர்வுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பவானின்ரா லால் எனது கோரிக்கைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் மையங்கள் 14-ல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டன. விருதுநகர், திண்டுக்கல், செங்கல்பட்டு, திருப்பூர் நகரங்கள் புதிய மையங்களைக் கொண்டவையாக அறிவிக்கப்பட்டன.
தற்போது செப்டம்பர் 11-ம் தேதி முதுகலை நீட் தேர்வு நடைபெறுகிறது. இருந்தாலும் முதலில் தமிழ்நாடு மையம் கிடைக்காமல் வெளி மாநில மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு மீண்டும் தமிழ்நாடு மையம் ஒன்றைத் தெரிவு செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி மாநில மாணவர்கள் அனைவருக்கும் சொந்த மாநிலத்திற்குள் தேர்வு மையம் கிடைப்பதை உறுதி செய்யக்கோரி மத்திய அரசின் கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பவானின்ரா லால் ஆகிய இருவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
கோவிட் பரவல் முடிவுக்கு வர இயலாத நிலையில் நீண்ட தூர, இடர் மிகுந்த பயணத்தைச் செய்யுமாறு மாணவர்களை நிர்பந்திக்க வேண்டாமென்று அக்கடிதத்தில் கோரியுள்ளேன்.
நல்ல பதில் கிடைக்கட்டும். மாணவர் இன்னல்கள் குறையட்டும்''.
இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT